வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை, பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்க தவறினால், தொடர் போராட்டம் நடத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சலுகைகள் மற்றும் கோரிக்கைகள் இடம்பெறவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், முருகையன், நேரு ஆகியோர் தலைமையில், சென்னையில் நேற்று முன்தினம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அறிக்கை:
வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை, 62 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்துள்ளதாக, அரசு பெருமைப்படுகிறது.
ஏமாற்றம்
கடினமான சீர்திருத்தங்கள் என முதல்வர் கூறுவது, அவரோ, அவருடைய அமைச்சர்களோ அல்லது அரசோ செலவினங்களை குறைத்து வரவில்லை.
நான்கு ஆண்டுகளாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணமாக ஈட்டி கொள்ளும் சரண் விடுப்பு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படியை ஒவ்வொரு தவணையிலும், ஆறு மாதம் தாமதம் செய்து, மூன்று தவணையாக வழங்கியுள்ளது. இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
மேலும், வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டும் என்ற இலக்கை எட்டுவது என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள், பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மேலும் வஞ்சிப்பது தான்.
பட்ஜெட் உரையில், அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியம் அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன.
இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.
மனித சங்கிலி போராட்டம்
எனவே, கடந்த அரசால் பறிக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகளாக வெளிவரும் என, எதிர்பார்க்கிறோம். தவறும்பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே முடிவு செய்தபடி, வரும், 24ம் தேதி மாவட்டங்களில், 20 ஆயிரம் கி.மீ., அளவில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, ஏப்., 2ம் தேதி திருச்சியில் உயர்மட்டக் குழு முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.