தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
பட்ஜெட்டை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். ஆனால், பெயர் சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு நாளிதழுக்கு மட்டும் நம்மை பாராட்ட மனமில்லை. அவர்கள் பாராட்டினால், சந்தேகப்பட வேண்டியிருக்கும்; பாராட்டவில்லை என்றால் கவனமாக இருக்க வேண்டும். பட்ஜெட்டில் குறை இல்லை என்பதற்காக, கேவலமாக சித்தரித்து விமர்சனம் செய்கின்றனர்; அமைச்சர்கள் போட்டோவை வெளியிடுகின்றனர்.
![]()
|
அமைச்சர்கள் கீழே பார்த்துக் கொண்டிருந்தால் கூட, துாங்குவது போல தான் போட்டோவில் தெரியும். அப்படியொரு போட்டோவை கீழ்த்தரமாக வெளியிட்டுள்ளனர்.எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சிக்கத் தான் செய்யும். சபையில் அமைதியும், மாண்பையும் காக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் பட்சத்தில் அடக்கமாக இருக்க வேண்டும். அவர்களின் கேள்விகளுக்கு மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பர்.
தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும். சட்டசபைக்கு அனைவரும் வருகை தர வேண்டும். 'டிவி' நேரலையில் தொகுதி மக்கள் உங்களை கண்காணித்துக் கொண்டிருப்பர் என்பதை மறந்து விடாதீர்கள்.பொறுமை, பணிவு, பண்பு இந்த மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.
நிதிநிலை நன்றாக இருந்தால், நீங்கள் கேட்காமலேயே நிதி ஒதுக்கி தரப்படும். இருக்கிற நிதியை வைத்து தான் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு முதல்வர் பேசியதாக தெரிகிறது. - நமது நிருபர் -