வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
கே.முருகன், துாத்துக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ., தலைவர்கள் யாரும், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது இல்லை. அப்படி இருக்கையில், அவர்கள் மற்றவர்களை தேச விரோதிகள் என அழைக்கின்றனர்' என்று அங்கலாய்த்து இருக்கிறார், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. வெரிகுட்... அவர் பாணியிலேயே, அவருக்கு பதில் அளிப்பதே பொருத்தமாக இருக்கும்...
பா.ஜ., தலைவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனரா, இல்லையா என்பது வேறு விஷயம். பங்கேற்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். தற்போது, காங்கிரஸ் கட்சியில் பதவியில் அமர்ந்து இருக்கும் எத்தனை பேர், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள்?

முதலில், குற்றச்சாட்டை அள்ளி வீசும் மல்லிகார்ஜுன கார்கேவாகிய நீங்கள், எந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றீர்கள்... எத்தனை முறை சிறை தண்டனை அனுபவித்தீர்கள்... எந்த சிறையில் இருந்தீர்கள்?
சரி, உங்களை விட்டு விடுவோம்... காங்., முன்னாள் தலைவர் சோனியா, பிரதமர் கனவில் மிதந்தபடி, வெளிநாடுகளில் நம் நாட்டைப் பற்றி கேவலமாக பேசிய ராகுல் மற்றும் சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், உலக பொருளாதார புலி சிதம்பரம், தொடர்ந்து, 10 ஆண்டுகள் பிரதமராக கோலோச்சிய, இரண்டாம் பொருளாதார புலி மன்மோகன் சிங், வேணுகோபால், அசோக் கெலாட், அழகிரி, ஜோதிமணி, செல்வகுமார், செல்வப் பெருந்தகை, கே.வி.தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் போன்றவர்களில், எத்தனை பேர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள்? பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...
யார் யாரோ போராடி, சிறை சென்று கிடைத்த சுதந்திரத்தை, நோகாமல் நோன்பு கும்பிட்டு அனுபவித்து கொண்டிருக்கும் உங்களுக்கு, பா.ஜ., கட்சியினரை பற்றி குறை கூற அருகதை உண்டா?
சரி, இன்னொரு விஷயத்தையும் சுட்டிக் காட்டுகிறோம்...
தற்போது இந்திய ரூபாயை, உலகில் உள்ள 18 நாடுகள், அமெரிக்க டாலருக்கு பதிலாக ஏற்றுக் கொள்ள சம்மதித்து இருக்கின்றன. இந்த தகவலாவது உங்களுக்கும்,உங்களுக்கு பின்னால் அணிவகுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் தெரியுமா? 'போராடி சுதந்திரம் வாங்கித் தந்தோம்; ஆட்சி அதிகாரத்தில், 60 ஆண்டுகள் கோலோச்சினோம்' என, பீற்றிக் கொள்ளும் காங்கிரசால் செய்ய முடியாத காரியத்தை, ஒன்பது ஆண்டுகளாக நடக்கும், பா.ஜ., ஆட்சி சாதித்து காட்டியுள்ளது.
சுதந்திரம் வாங்கி தந்தோம் என்று பீற்றியபடியே, சுதந்திரம் கொடுத்த நாட்டுக்கே சென்று, கொடுத்த சுதந்திரத்தை திரும்ப பெற்றுக் கொள்ளச் சொல்லி, கோரிக்கை விடுத்துக் கொண்டிருப்பதை விட, உங்களின் காங்கிரஸ் கட்சி, அந்த சுதந்திரத்தை வாங்கிக் கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.