வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''புகார் வந்தும், நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார் குப்பண்ணா.
''என்ன விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சியில இருக்கற ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருத்தர், ஜோதிடம், ஜாதகம் எல்லாம் பார்ப்பார்... பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஜாதகம் பார்த்தவர், 'நீங்க, அரசர் குலத்தைச் சேர்ந்தவங்க'ன்னு 'அடிச்சு விட்டிருக்கார்' ஓய்...
''சில பூஜைகள் பண்ணினா, அரசர் குல பெண் மாதிரியே வசதி, வாய்ப்புகள் பெருகும்னு சொல்லி, 'எருமை, ஆடு, கோழிகள் பலி தரணும்... சுடுகாட்டுல நடுராத்திரியில குதிரையை வச்சு பூஜை செய்யணும்'னு பல காரணங்களை அடுக்கி, 26 லட்சம் ரூபாயை வாங்கி ஏமாத்திட்டார் ஓய்...

''அந்தப் பெண்மணி, கவுன்சிலர் பத்தி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருக்காங்க... அந்தப் புகார், எஸ்.பி., வழியா, டி.எஸ்.பி., விசாரணைக்கும் வந்துடுத்து...
''ஆனா கவுன்சிலர், நகராட்சியின், 'தலை'க்கு நெருக்கமானவரா இருக்கறதால, போலீசார் நடவடிக்கை எடுக்காம இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
அப்போது தான் பெஞ்சுக்கு வந்த அண்ணாச்சி, ''தண்டபாணி, கொஞ்சம் தள்ளி உட்காரும்...'' என்றபடியே, ''பட்டும் திருந்த மாட்டேங்காரு வே...'' என்றார்.