சாயல்குடி : மூக்கையூர் ஊராட்சி பூப்பாண்டியபுரம் நடுத்தெருவில் கடந்த இரு நாட்களாக பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி தரமற்றதாக நடப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
பூப்பாண்டியபுரத்தில் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி குறிப்பிட்ட தெருக்களில் பேவர் பிளாக் சாலை பணி நடக்கிறது. சேதமடைந்த பழைய சிமென்ட் சாலையை அகற்றி பணிகளை செய்யாமல் பக்கவாட்டில் அரை அடி உயரத்தில் சிமென்ட் தடுப்பு மேடை அமைத்துஉள்ளனர். தரமற்ற இக்கட்டுமானத்தால் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
அவர்கள் கூறியதாவது:
பேவர் பிளாக் சாலைக்காக இருபுறமும் பக்கவாட்டு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது நேற்று முன்தினம் பெய்த மழையில் கரைந்துள்ளது. கையால் தொட்டால் உதிர்கிறது. அவசரகதியில், அமைக்கப்படும் பேவர்பிளாக் சாலையால் விரைவில் பக்கவாட்டு தடுப்பு சேதமடையும்.
நாளடைவில் கற்கள் பெயரும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இதுகுறித்து கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றனர்.