வி.சீதா, பாரம்பரிய விவசாயி, அரளிக்கோட்டை: தமிழக பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை வகுத்துள்ளனர். குறிப்பாக விவசாய நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்க தடையில்லை என்ற அறிவிப்பு வரவேற்பு தருகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் கருவி வழங்கும் அறிவிப்பு நல்ல விஷயம். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில், ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வரை இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் செயலாகும். பாரம்பரிய விவசாயத்தில் சாதிக்கும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு, இயற்கை விவசாயத்தை காக்கும் நல்ல திட்டம்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட வறட்சியான மாவட்டங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, அங்கு வேளாண் காடுகள் திட்டத்தை செயல்படுத்த இலவச மரக்கன்று வழங்குவதை வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க அதிக நிதி ஒதுக்கியது வரவேற்க கூடியது. அதே நேரம் பட்ஜெட்டில், பாரம்பரிய நெல் ரகங்களை விற்பனை செய்வதற்கான வணிக மையம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. சிற்றுண்டிகளில் சிறுதானியம் பயன்படுத்துமாறு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிறுதானிய தேவை அதிகரித்து, விவசாயிகள் அதிகளவில் நடவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் நன்மையும், தீமையும் கலந்து உள்ளன. தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களுக்கு முழுமையான செயல்வடிவம் தந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும், என்றார்.
வீரபாண்டி, மாவட்ட தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டாறு வழித்தடங்களை சீரமைப்பு செய்து கால்வாய், கண்மாய்களை துார் வார திட்டம் ஏதும் இல்லை. வைகையில் தொடர்ந்து ஆறு மாதம் நீரோட்டம் இருந்தும் 4 தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை நீரை தேக்குவதற்கு புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. விவசாயிகளுக்கு உரங்கள்வாங்குவதற்கு மாநில அரசு இந்த பட்ஜெட்டில் உர மானியம் வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 14 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்பதை முழுமையாக விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு முழு மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு தானியங்கள் ஊக்குவிப்பு, நில மேம்பாட்டு திட்டத்தை வரவேற்கிறோம்.
எம்.அர்ச்சுனன், மாநில பொதுச் செயலாளர், காவிரி, வைகை, கிருமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, சிவகங்கை: காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு போராடி வருகிறது. 2021 பிப்.14ல் அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் பழனிசாமியால் விராலிமலைப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. காவிரி ஆற்றில் கரூர் மாயனுார் கதவணையில் இருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ., முதல் பகுதியாகவும், தெற்கு வெள்ளாறில் இருந்து வைகை ஆறுவரை 108 கி.மீ., இரண்டாம் பகுதியாகவும், வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி, புதுப்பட்டி குண்டாறு வரை 34 கி.மீ., மூன்றாம் பகுதி என 260 கி.மீ., துாரம் கால்வாய் வெட்டப்படும், என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள எட்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்திற்கு 2021- 22ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது 760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23 ல் தி.மு.க., ஆட்சியில் 280 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாயனுார் ஜீரோ பாயின்டில் இருந்து 50 கி.மீ., துாரம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணி நடந்து வருகிறது. காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு பொது பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வேளாண் பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
ஆர்.நாகநாதன், விவசாய அணி பொது செயலாளர்.பா.ஜ., தேவகோட்டை: வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. பட்ஜெட் தயாரிக்கும் முன் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். சிவகங்கை விவசாய தொழில் வளர்ச்சிக்கு எந்த அறிவிப்பும் இல்லை.நெற்பயிருக்கு நிவாரணம் கோரி வந்தோம். அது பற்றி ஒரு அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. கரும்புக்கு விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் தருவதாக கூறினர். தற்போது வெறும் ரூ 195 தான் உயர்த்தி தருவதாக கூறி இருக்கிறார்கள். வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ 2 லட்சம் தருவதாக அறிவித்து உள்ளனர். ஒரு பட்டதாரி விவசாயம் தொடர்பாக ரூ. 2 லட்சத்தில் எந்த தொழில் தொடங்க முடியும்.
ஆறுமுகம் சேதுராமன், விவசாயி, திருப்புத்தூர்: சாகுபடி தொழில் நுட்பம், வானிலை அறிவிப்பு தரும் வாட்ஸ் ஆப் குழுக்கள், வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு உதவி மையம் கிராம விவசாயிகளுக்கு பலனளிக்கும். சிறுதானிய உற்பத்தி, மாற்றுப் பயிர் சாகுபடி ஆய்வு அறிவிப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தினால் வானம் பார்த்த பூமியான திருப்புத்தூர் போன்ற பகுதிக்கு நல்லது. சிவகங்கை பாசன வசதியை அதிகரிக்கும் பெரியாறு அணையில் 152 நீர் தேக்கம், விஸ்தரிப்பு கால்வாய்கள் புனரமைப்பு, காவிரி - குண்டாறு இணைப்பு குறித்து அறிவிப்பில்லை. தொழிலாளர் பற்றாக்குறை, கால்நடை மேய்ச்சல் நிலம் குறித்தும் விவாதிக்கப்படவில்லை.
உ.சிவராமன், இயற்கை விவசாயி, உலகம்பட்டி: அங்கக வேளாண்மைக்கு 100 குழுக்கள் அமைத்து ஊக்கப்படுத்துவது, ரேஷனில் 2 கிலோ கேழ்வரகு தருவது வரவேற்கத்தக்கது. சிவகங்கை கருப்பு கவுனிக்கு புவிசார் குறியீடு பெறுவது பாராட்டுக்குரியது. பாரம்பரிய நெல் விதை உற்பத்திக்கு 200 ஏக்கர் ஒதுக்கி மானிய விலையில் விதைகளை கொடுக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாரம்பரிய விதைகள் தமிழக அளவில் கிடைக்கிறது. பாரம்பரிய ரக நெல்லை அரசே கொள்முதல் செய்து அதை பள்ளி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவாக கொடுக்க வேண்டும் என்பது பாரம்பரிய விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு நூறு ரூபாய் உயர்த்தியது யானைக்கு சோளப்பொரி போட்டது போன்றது. தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களைக் கொண்டு விவசாய நிலங்களில் சில பணிகளை செய்ய மட்டுமே அனுமதி இருக்கிறது.
கருணாகர சேதுபதி, திருப்புவனம், கணக்கன்குடி: தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்புகவுனி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட ரகங்களை ஒருசில விவசாயிகள் மீட்டெடுத்து வருகின்றனர். இதில் கருப்புகவுனி சிவகங்கை மாவட்ட தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ற 150 நாட்கள் பயிராகும், புற்றுநோய் வராமல் தடுக்கும் சுத்தமான கருப்புகவுனி ரகம் சிவகங்கை மாவட்டத்தின் பாரம்பரிய பயிராகும். தமிழக அரசு கருப்பு கவுனி க்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது இயற்கை வேளாண்மை நேசிக்கும் எங்களைப்போன்ற விவசாயிகள் வரவேற்கிறோம். புவிசார் குறியீடு கிடைத்தால் மார்க்கெட்டில் கருப்புகவுனியின் விலை கூடும், அப்போது பரவலாக அனைத்து விவசாயிகளும் இதனை பயிரிட தொடங்குவார்கள்.
தங்கப்பாண்டியன், விவசாய சங்க நிர்வாகி, தெற்கு கீரனூர்: தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தியை பெருக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினருக்கு கேழ்வரகு வழங்கப்படுவதை தமிழகம் முழுவதும் விரிவு படுத்த வேண்டும்.சிறுதானிய ஊட்டச்சத்து உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகளை வழங்கப்படுவதை வருடம் தோறும் அதிகரிக்க வேண்டும்.கம்பு கேழ்வரகு, திணை,சாமை போன்ற பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா 5 லட்சம் பரிசு வழங்கப்படுவதை அனைத்து பயிர்களையும் விளைவிக்கும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை,தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலம் துவங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.