கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகன், 28, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டி அடுத்த முனுக்கன்கொட்டாயைச் சேர்ந்தவர் சரண்யா, 22. உறவினர்களான இருவரும் பள்ளிப்பருவம் முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும், சரண்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. தங்கள் மகள் மீதான காதலை விட்டு விடுமாறு, ஜெகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம், சரண்யா குடும்பத்தினர் தொடர்ந்து கேட்டு வந்தனர். ஜெகன் வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லை. இரு குடும்பத்தினருக்கும் தகராறு அதிகரித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய சரண்யா, ஜனவரியில் ஜெகனை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின், ஜெகன் வீட்டார் சம்மதத்துடன், அவர்கள் வீட்டிலேயே இந்த இளம் தம்பதி வாழ்க்கையை துவங்கினர். ஆனால், சரண்யா தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள், ஜெகனை பழிவாங்க காத்திருந்தனர். நேற்று கிருஷ்ணகிரி அணை ரோடு அருகே, டைல்ஸ் ஒட்டும் பணிக்கு ஜெகன் சென்றார். இதை கண்காணித்த சரண்யா தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள், அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.
மதியம், 1:30 மணிக்கு 'டூ - வீலரில்' அணுகு சாலையில் ஜெகன் சென்ற போது, வழிமறித்த சங்கர் மற்றும் இருவர், ஜெகனை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சங்கர் உள்ளிட்ட மூவரும், டூ - வீலர்களில் தப்பினர். பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த படுகொலையை, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து திகைத்தனர். சிலர் மொபைல் போனில், 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.
ஜெகனின் உறவினர்கள் சம்பவ இடத்தில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மறியலில் ஈடுபட முயன்றனர். எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு, மறியலில் ஈடுபட முயன்றவர்களை அப்புறப்படுத்தினர். கொலை தொடர்பாக, சங்கர், அருள், திம்மராயன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சங்கர், சரணடைந்த நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் ரூ.50 லட்சம் கேட்டு நண்பரை கடத்திய நண்பர்
மதுரை சுப்பிரமணியபுரம் சகாதீன் 33. கார் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரது நண்பர் இஸ்மாயில்புரம் ஆத்திப் 27. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சகாதீனிடம் ரூ.30 ஆயிரம் ஆத்திப் கடன் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை. இரு மாதங்களுக்கு முன் திருட்டு வழக்கில் தன் டூவீலர் சிக்கிக்கொண்டதால் அதை மீட்க வேண்டும் எனக்கூறி சகாதீனிடம் மீண்டும் ரூ.20 ஆயிரம் ஆத்திப் கடன் வாங்கினார். இதையும் திருப்பித்தரவில்லை. கடனை திருப்பித்தருமாறு சகாதீன் வற்புறுத்தி வந்தார்.
மார்ச் 13 ல் சின்னசொக்கிக்குளம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு மற்றொரு நண்பர் சாகுல்ஹமீதுடன் டூவீலரில் சகாதீன் சிகரெட் புகைக்க சென்ற போது இருவரையும் ஆத்திப் தலைமையிலான கும்பல் அரிவாளை காட்டி கடத்தியது. சகாதீன் காரில் அவரையும், ஆத்திப் கூட்டாளிகள் வந்த டூவீலரில் சாகுல்ஹமீதையும் கண்களில் துணியை கட்டி அழைத்துச்சென்றனர். அரைமணி நேரம் கழித்து ஒரு வீட்டின் அறையில் இருவரையும் அடைத்தனர்.
'எதற்காக எங்களை கடத்தினீர்கள்' என சகாதீன் கேட்டதற்கு, 'நான் உனக்கு எவ்வளவோ உதவி செய்துள்ளேன். அதை மறந்து விட்டு நீ கொடுத்த கடனை மட்டும் கேட்கிறாயே' என ஆத்திப் கூறினார். அவர்களிடம் இருந்த சகாதீன் தப்பிக்க முயன்றபோது அரிவாளால் தலையில் அடித்ததில் காயம் ஏற்பட்டது. மறுநாள் இருவரையும் சிவகங்கை ரிங் ரோடு பகுதியில் காரில் இறக்கிவிட்டு, 'இச்சம்பவம் குறித்து வெளியே சொல்லக்கூடாது' என ஆத்திப் கூட்டாளிகள் மிரட்டிவிட்டு டூவீலர்களில் தலைமறைவாயினர்.
இரும்பு கேட்டில் தவறுதலாக முட்டியதால் தலைக்காயம் ஏற்பட்டதாக கூறி ஜெய்ஹிந்த்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற சகாதீனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி, 'நேற்றிரவு நம் வீட்டிற்கு ஆத்திப் வந்தார். உங்களை கடத்தி வைத்திருப்பதாகவும் ரூ.50 லட்சம் தந்தால்தான் உயிருடன் திரும்பி வருவீர்கள் என்றும் மிரட்டினார். இதனால் நான் பயந்து அவ்வளவு பணம் இப்போதைக்கு இல்லை. ரூ.ஒரு லட்சம் இருக்கிறது என்றுகூறி கொடுத்து அனுப்பினேன்' என்றார்.

உடனடியாக போலீசில் புகார் கொடுத்தால் மீண்டும் பிரச்னை வரும் என சகாதீன் பயத்தில் இருந்தார். உறவினர்கள், குடும்பத்தினர் ஆலோசனைபடி நேற்றுமுன்தினம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். உதவிகமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் அலைபேசி டவரை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த ஆத்திப், கூட்டாளிகள் தெப்பக்குளம் அப்துல் இம்ரான் 23, கே.கே.நகர் அகில் ஆசிக் 24, நெல்பேட்டை முகம்மது அனஸ் சபிக் 23, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திருமணிசெல்வம், ஹரி, வாசிம், அருள், வசந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.
8க்கு பாலியல் தொல்லை; 70 க்கு தண்டனை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெத்துார் மேட்டுப்பட்டி விவசாயி பெரியகருப்பன் 70. இவர் 2013ல் 8 வயது சிறுமியை பலகாரம் வாங்கித் தருவதாகக்கூறி டூவீலரில் அழைத்துச் சென்றார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். கூடல்புதுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். பெரியகருப்பனுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் உத்தரவிட்டார்.
தலைமையாசிரியை ஆசிரியர் மீது தாக்குதல்
துாத்துக்குடி மாவட்டம், கீழநம்பிபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் செல்வி, மருமகன் சிவலிங்கம். இவர்கள், செங்கல்பட்டு அருகே திருப்போரூரில் வசிக்கின்றனர். அவர்களது மகன் பிரகதீஷ், 7, தாத்தா முனியசாமி வீட்டில் வசிக்கிறார். பிரகதீஷ், அப்பகுதி ஹிந்து துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று முன்தினம் பள்ளியில் விளையாடிய போது, அவர் விழுந்துள்ளார். கவனமாக விளையாடும் படி ஆசிரியர் பாரத் சத்தமிட்டார். இது குறித்து அச்சிறுவன், ஆசிரியர் பாரத் அடித்ததாக, தாத்தா முனியசாமியிடம் கூறினார். முனியசாமி நேற்று காலை அவசர போலீஸ் எண் 100ல் புகார் தெரிவித்தார். போலீசார் பள்ளியில் விசாரித்து விட்டு, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என கூறி சென்றனர்.
பின் முனியசாமி, சிவலிங்கம், செல்வி ஆகியோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியை குருவம்மாள், 60, ஆசிரியர் பாரத் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். புகாரின்படி, முனியசாமி உள்ளிட்ட மூவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரூ.10 கோடி கேட்டு கட்கரிக்கு கொலை மிரட்டல்
பா.ஜ., மூத்தத் தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இங்கு, அமைச்சர் நிதின் கட்கரிக்கு சொந்தமாக அலுவலகம் உள்ளது.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்திற்கு, தொலைபேசி வாயிலாக மூன்று முறை கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. இவை குறித்து, நிதின் கட்கரியின் அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, அமைச்சர் நிதின் கட்கரி வீடு மற்றும் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.