வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பேசியது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக்கை, ஓமனிலிருந்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பையும், 'பீஸ்' என்ற 'டிவி' சேனலையும் நடத்தி வந்தார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரிடம் நடத்திய விசாரணையில், ஜாகிர் நாயக்கின் பேச்சை கேட்டுத் தான், இந்த தாக்குதலை நடத்தியதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், இரு மதத்தினருக்கு இடையே வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசியதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் ஜாகிர் நாயக் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது அமைப்பு மற்றும் டிவி சேனலுக்கும், 2016ல் தடை விதிக்கப்பட்டது. கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, தென் கிழக்காசிய நாடான மலேஷியாவில் ஜாகிர் நாயக் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மேற்காசிய நாடான ஓமனில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில், ஜாகிர் நாயக் நாளை பங்கேற்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள சட்டப்படி ஜாகிர் நாயக்கை கைது செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.
இது தொடர்பாக ஓமன் அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்காக, இந்திய சட்ட நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு ஏற்கனவே அங்கு சென்றுள்ளது. ஓமனில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளும், அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.