வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'த.மா.கா., தலைவர் வாசன், காங்கிரசுக்கு திரும்பினால், அவருக்கு கீழ் பணியாற்ற தயார்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி விடுத்த அழைப்புக்கு, காங்கிரசில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில், மதுரையில் த.மா.கா., உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அழகிரி பேசுகையில், 'மூப்பனாரை போல பல தலைவர்கள், காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று இணைந்த வரலாறு உண்டு. எனவே, வாசன் காங்கிரசுக்கு திரும்பினால், அவருக்கு கீழ் பணியாற்ற தயார்' என்றார்.

அழகிரி அழைப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், அழகிரிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் விபரம்:
* வாசன் காங்கிரசில் இணைந்தால், அழகிரி உருவப் பொம்மையை எரிப்போம்
* தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மாறும் முன், அழகிரி இப்படி ஒரு அழைப்பு விடுக்கலாமா; இனி அழைப்பு விடுக்காதீர்கள்
* எந்த நிபந்தனையும் இல்லாமல், எதிரியோடு சரணாகதி அடையும் போதே, அழகிரியின் நோக்கம் பா.ஜ.,வில் துண்டு போடுவதுதான் என்பது புரிகிறது. பா.ஜ.,வில் இணைவதற்காக, பிரதமர் மோடியிடம் அழைத்துச் செல்ல வாசன் தேவை.
இனியும் பதவியை பறிக்கவில்லை என்றால், செயலற்ற காங்கிரஸ் தலைமை என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு பதிவுகள் வெளியாகி உள்ளன.