வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ரயில்வேயுடன் இணைந்து செயல்பட, சிறப்பு நிறுவனம் உருவாக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு, தெற்கு ரயில்வே வரவேற்பு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ரயில் திட்டங்கள், பல ஆண்டுகளாக மெதுவாகவே நடக்கின்றன. தமிழகத்தின் சென்னை -- மஹாபலிபுரம் - கடலுார் 179 கி.மீட்டர்; திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை 70 கி.மீட்டர்; திண்டிவனம் - நகரி 179 கி.மீட்டர்; அத்திப்பட்டு - புத்துார் 88 கி.மீட்டர்; ஈரோடு - பழநி 91 கி.மீ., உள்ளிட்ட திட்டங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
வலியுறுத்தல்
போதிய நிதி இன்மை, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்ற காரணங்கள், முக்கியமானதாக இருக்கின்றன. எனவே, ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற, மாநில அரசுகள் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என, மத்திய ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த வகையில், கேளரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகள், ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து, ரயில்வே பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழக போக்குவரத்து அமைப்பில் ரயில்வே துறையின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையை சரிசெய்ய, மாநிலத்தில் புதிய ரயில் திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து, ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ரயில்வே வரவேற்பு தெரிவித்துள்ளது.
வரவேற்கத்தக்கது
ஆனால், வல்லுனர்களிடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அண்ணா பல்கலை போக்குவரத்து பொறியியல் துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களை வேகப்படுத்த, ரயில்வேயுடன் தமிழக அரசு இணைந்து செயல்பட எடுத்துள்ள முயற்சி வரவேற்கதக்கது.
இருப்பினும், இதற்காக அதிகளவில் செலவு செய்து, ஒரு சிறப்பு நிறுவனத்தை உருவாக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஏற்கனவே உள்ள பல நிறுவனங்களில் ஒன்றை தேர்வு செய்து, இந்த பணியை கொள்ளலாம். தமிழகத்தில் கூடுதல் ரயில்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.