வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாகர்கோவில்: சென்னையில் படித்த போது, காதலித்த பெண்ணை திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட விரும்பிய கன்னியாகுமரி மாவட்ட பாதிரியாரை, பெற்றோர் தடுத்ததால் விரக்தியுற்று பெண்களிடம் பழகி, ஆபாச படங்களை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ, 29. பேச்சிப்பாறை மலங்கரை சர்ச்சில் பாதிரியாராக இருந்த போது, நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்ததாக எழுந்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண் ஒருவருடன், பெனடிக் ஆன்றோ பழகியதை தட்டிக் கேட்டதில், இவரது லேப் - டாப்பை எடுத்துச் சென்றவர்கள், அதில் இருந்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதன் வாயிலாக பல பெண்களை அவர் ஆபாச படம் எடுத்தது தெரிந்தது. கைதான இவரிடம் போலீசார் ஏராளமான கேள்விகள் கேட்டனர். பெரும்பாலான கேள்விகளுக்கு மவுனமாக இருந்தார்.
ஆனால், 'யாரையும் கட்டாயப்படுத்தவில்லை; மிரட்டவில்லை; எந்த தொந்தரவும் செய்யவில்லை' என, மட்டும் கூறினார்.
அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது: பாதிரியார் பெனடிக் ஆன்றோ, பிளஸ் 2 வரை படித்து விட்டு, இறையியல், தத்துவவியல் உள்ளிட்ட பாடங்களை படித்தார். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் பேசுவார். சென்னையில் படித்த போது, பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. அந்த பெண்ணை திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கைக்கு திரும்ப இருந்தார். இதற்கு ஒப்புக் கொள்ளாமல், பெற்றோர் தடுத்தனர்.
இதனால் அவர் விரக்திக்கு உள்ளானார். என்றாலும், அந்த பெண்ணுடன் பழக்கம் நீடித்தது. பாதிரியார் ஆன பிறகும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். பாதிரியார் பணிபுரிந்த சர்ச்சுகளுக்கு அந்த பெண் வந்து சென்றார். அந்த பெண்ணுடனான நிர்வாண படங்கள் தான் லேப் டாப்பில் இருந்தன. அவை தான் வலைதளங்களில் பரவின.

அந்த பெண்ணுடன் அதிக நேரம் பெனடிக் ஆன்றோ, 'வாட்ஸ் ஆப்'பில் பேசியுள்ளார். மேலும், அறிமுகமாகும் எல்லா பெண்களுடனும் போட்டோ எடுத்து, லேப் டாப்பில் சேமித்துள்ளார். வாட்ஸ் ஆப், 'சாட்டிங்' இவரது பொழுதுபோக்கு. அவ்வாறு சாட் செய்யும் போதே, எதிர்முனையில் இருக்கும் பெண்ணின் மனநிலை தெரிந்து, அதற்கேற்ப பேசி தன்வசப்படுத்தி விடுவார்.
இப்படி தான் கொல்லங்கோடைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, குடும்பத்தாருக்கு தெரிய வர பிரச்னை ஆகியுள்ளது. பாதிரியார் மீது மேலும் நான்கு பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். இதில், சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் உள்ளார். இதனால் பெனடிக் ஆன்றோவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.