வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைசியாக, 2018ல் தெருநாய்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 57 ஆயிரத்து, 366 தெரு நாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போன்றவை செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, தெருநாய்கள் கணக்கெடுப்பதும், அவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாள்வதும் அவசியம்.

வேண்டுகோள்
அதேநேரம், 2020ல் இருந்து கொரோனா பரவ துவங்கியதால், 2021ல் எடுக்க வேண்டிய தெருநாய்கள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும், தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி போன்ற பணிகளும் பெரியளவில் நடைபெறவில்லை. பொதுமக்கள் அளிக்கும் புகாரின் படி, அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால், கணக்கெடுப்புக்கு பிந்தைய நான்கு ஆண்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை, இரட்டிப்பு என்ற வகையில், ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என, கருதப்படுகிறது.
இந்த தெருநாய்கள், குப்பை தொட்டிகள், சாலையோரங்களில் கூட்டமாக சுற்றி திரிவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன. நாய்கள் துரத்துவதால், பலர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.தெருநாய்களின் கட்டுப்படுத்துவதை மாநகராட்சி தீவிரப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமும் சிகிச்சை
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி, மூன்று வாரங்களாக தெருநாய்க்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை பணியை செயல்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி மற்றும் கருத்தடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, 1,056 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்ட மற்ற தெருநாய்களுக்கு ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்டதை உறுதி செய்து, அவற்றுக்கு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. ஒரு நாயின் சராசரி வாழ்நாள் 10 ஆண்டு. நாய் பிறந்த எட்டாவது மாதத்திலேயே கருத்தரிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறது.
கணக்கெடுப்பு
ஒருமுறைக்கு, ஆறு முதல் 10 குட்டிகள் வரை பிரசவிக்கிறது. இதன்படி, சென்னையில் நான்கு ஆண்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை உயர்ந்திருக்கலாம். தற்போது, பிடிப்படும் நாய்களுக்கு, கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டப்பின், அதன்மேல் வண்ணங்கள் தெளிக்கப்படுகின்றன. பிடிபடும் நாய்கள் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.