கோவை: தமிழக வேளாண் பட்ஜெட்டில், கோவை மாவட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
* கருவேப்பிலை சாகுபடியை, 5 ஆண்டுகளில், 1,500 ஹெக்டேரில் உயர்த்துவதற்கு ரூ.2.5 கோடியில் கருவேப்பிலை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* கோவை மாவட்டம் மலையடிபாளையம், நெகமம், காரமடை, ஆனைமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கூடுதல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.
* வேளாண் இயந்திர பணிமனையில் டிராக்டர், அறுவடை இயந்திரங்களை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பழுது நீக்கம், பராமரிப்பு குறித்த பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படும்.
* செங்காத்தாள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க, ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் வர்த்தகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதி வழங்கப்படும்.
* தரிசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்புடன் பழப்பயிர் நடவு செய்து, சொட்டு நீர் பாசன வசதி செய்ய ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* வேளாண், தோட்டக்கலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் பூச்சிகள் பற்றிய புரிதலை மேம்படுத்த, கோவை வேளாண் பல்லை பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்.
* அரிய வகை தாவரத்தை பாதுகாத்து, அழியும் நிலையில் உள்ள தாவர பல்லுயிர் செல்வத்தை மேம்படுத்த, மலரியல் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், சிறந்த பூங்காக்களை உருவாக்கவும், தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கவும், தாவரவியல் பூங்காவை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
* நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ள வட்டங்களில், நுண்ணீர் பாசன முறை அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்படும்.
* குறு, சிறு தானிய சாகுபடி பரப்பை அதிகரித்து, உற்பத்தியை உயர்த்தி, மதிப்பு கூட்டி, நுகர்வோர் பயன்பாட்டை அதிகரிக்க ரூ.4 கோடி வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டம்
* இயற்கை உர தேவையை பூர்த்தி செய்ய, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிப்பு கட்டமைப்பு உருவாக்க ரூ.1.5 கோடி ஒதுக்கப்படும்.
* முருங்கை சாகுபடி உயர்த்த நிதி ஒதுக்கி, மதிப்பு கூட்டி, ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
* பசுமை குடில், நிழல் வலை குடிலில் உயர் மதிப்புள்ள காய்கறிகள், பூக்களை ஆண்டு முழுவதும் சாகுபடி அதிக வருவாய் ஈடுபடுவதற்கு, வரும் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்துக்கு முன்னுரிமை தரப்படும்.
* மூலனுார் குட்டை முருங்கை அகில உலக அளவில் உயர் மதிப்பு பெற புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு அடிப்படை தேவைகளை செய்து தருவதற்கு நிதி ஒதுக்கப்படும்.
* நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, ஐந்தாண்டுகளில், ரூ.50 கோடி சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.