வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆகம விதிப்படியே கும்பாபிஷேகம்

தமிழகத்தில் இறை வழிபாட்டு முறைகள் வரலாற்றுக்கு முற்பட்ட பழமை உடையன. ஆகம வழியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவ்வழியிலேயே பண்டைக்காலந்தொட்டு நாள், சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பெற்று வருகின்றன. மன்னர் ஆட்சிக்காலத்திலும் இம்முறையில் மாற்றம் செய்யப்பட்டதற்கு சான்றாவணங்கள் ஏதுமில்லை. 12ம் நுாற்றாண்டில் இயற்றப்பெற்ற சைவத்தமிழ்க் காப்பியமாகிய பெரிய புராணத்தில் பூசலார் நாயனார் புராணத்தில் சிவாகம விதிப்படி கோயில் எழுப்பியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னுமூவாண்டில் வடகலையும், தென்கலையும் ஞானப்பாலில் கற்றுணர்ந்த ஞானப்பிள்ளையின் முதல் பதிகமாய தோடுடையசெவியன் என்பது எம்பெருமான் திருச்செவியில் நேரிடையாய்ச் சென்றெட்டிய நிலையில், அவரொத்த சமயகுரவர் திருவாக்குகளை அக்கினியில் இட்டு அவ்வழியில் இறைவனுக்கு உரித்தாக்குதல் எனும் செய்கை அறிவு பூர்வமானதா.
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் எனும் ஞானியர் தம்
செந்தமிழ்க்கவிவாணர் தம் திருவாக்குகளைக் கேட்டு, அவர் வகுத்த நெறிப்படியே செல்வது தான் தக்கதாகும். முன்னோர் மொழிபொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம் எனும் பழந்தமிழ் வாக்கியம். முன்னோர் பயன்படுத்திய மொழியை பொன் போல் போற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
சுருங்கச் சொல்லின், மரபு நிலை திரியாது, முன்னோர் வகுத்த ஆகம நெறிப்படியே சிறப்பொடு பூசனைகள், நித்ய நைமித்தியங்கள், நாள், பிற சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்பதே உள்ளக்கிடக்கை. உறுதியான நிலைப்பாடும் அதுவே. இதில் மாறான செயல்பாட்டுக்கு எள்ளளவும் இடமில்லை. ''சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை' எனும் சமயகுரவர் வாக்கின்படி, முன்னோர் செய்தனவே செய்தால் ஏற்றிடுவான் என்பதே மெய்மை'' என்றார்.
ஆகமவிதிப்படியும், தமிழிலும் நடத்தலாம்

கோயில் குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் காலம் காலமாக ஆகமவிதிப்படி நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தமிழிலும் நடத்த ஆரம்பித்துள்ளனர். இது மக்களுக்கு தெளிவாக புரிகிறது. எதற்காக குடமுழுக்கு செய்யப்படுகிறது, வேதமந்திரத்தின் பலன்கள் போன்றவை அனைவருக்கும் விளக்கி சொல்லப்படுகிறது. ஆகவே என் தனிப்பட்ட கருத்து கோயில் குடமுழுக்கு ஆகமவிதிப்படியும் நடத்தலாம். தமிழிலும் நடத்தலாம். தமிழில் நடத்தப்படுகிறதா, சமஸ்கிருதத்ததில் நடத்தப்படுகிறதா என நான் பார்ப்பதில்லை. குடமுழுக்கு என்ற அடிப்படையில் அனைத்து கோயில்களிலும் பங்கேற்று வருகிறேன்.
திருமுறைகளில் நடைமுறை இல்லை

என் அனுபவத்தில் நுாற்றுக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளேன். தமிழில் குடமுழுக்கு என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகும். 2007ம் ஆண்டில், இதுதொடர்பாக தர்மபுரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், நானும் கலந்து கொண்டேன். அப்போது ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் புதிதாக கட்டப்படும் கோயில்களுக்கு அவரவர் விருப்பம் போல் கும்பாபஷேகம் செய்து கொள்ளலாம் என்றும், பாரம்பரியமான கோயில்களுக்கு ஆகமங்களில் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றியே கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது.
தமிழில் உள்ள தேவாரம், திருமுறைகள், திருப்புகழ் என்று எல்லா பாடல்களும், இறைவனின் திருவருளை வேண்டி பாடும் வகையில் தான் அமைந்துள்ளன. இது போன்ற பாடல்களில் கும்பாபிஷேகம் நடத்தும் வழிகள் பற்றி குறிப்பிடவில்லை. ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால், அவற்றை திசை திருப்பும் நோக்கில், இது போன்ற சமூக குழப்பத்தை ஏற்படுத்தும் சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றனர். அதே நேரத்தில், எல்லா கும்பாபிஷேகத்திலும் சில திருமுறைப்பாடல்கள் பாடப்பட்டு, இறைவனைப் போற்றுகின்றோம். ஆனால், எந்த ஒரு இடத்திலும், தமிழ் திருமுறைகள், பாடல்களில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான வழிகள் கூறப்படவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்மட்டக் கமிட்டியில் நானும், ராஜா பட்டரும் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளோம்.
வழிகளின் படியே வழிபாடு வேண்டும்
மந்திரங்கள் வேறு, ஸ்தோத்திரங்கள் வேறு. மந்திரங்கள் வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை. வேதத்துக்கு வரி வடிவம் இல்லை. வெறும் ஒலி வடிவம் மட்டுமே. எனவே தான். காலங்காலமாக வேதம் சிரவணம் எனப்படும் வாய் மொழிப்பாடமாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் 'பீஜ' அட்சரம் உண்டு. இதை 'பீஜாட்சரம்' என்பர். ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்தால் தான் அதற்குரிய தெய்வம் அங்கு வந்து சேரும் என்பது நம்பிக்கை. இந்த பீஜாட்சரங்கள் எந்த மொழியையும் சார்ந்தவையல்ல.
பலர் அவை வடமொழிச் சொற்கள் என்று தவறாகக் கருதுகின்றனர்.
கும்பாபிஷேகம் என்பது ஒரு கோயில் கருவறையில் உள்ள பிம்பத்தில் உள்ள சாந்நித்தியம் எனப்படும் இறைசக்தியை, ஒரு குடத்தில் உள்ள புனித நீருக்கு மாற்றி அந்தக் குடத்தை யாக சாலைக்குக் கொண்டு வந்து, அக்னியின் முன் மந்திரப்பிரயோகம் செய்து, குடத்திலுள்ள நீரின் இறைசக்தியை வலுப்படுத்துவது அல்லது செறிவூட்டுவதாகும். இவ்வாறு பல முறை செய்த பின், அந்த குடத்தில் உள்ள இறை சக்தி செறிவூட்டப்பட்ட நீரை மீண்டும் கருவறையில் உள்ள பிம்பத்திலும், அதன் மேலுள்ள கோபுரக்கலசத்திலும் சேர்ப்பதே கும்பாபிஷேகம் ஆகும். இவை அனைத்தையும் செய்ய பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி செய்வது தான் உரிய பலன் தரும். அதை விடுத்துவெறும் துதிப்பாடல்களை மட்டும் பாடி இறை சக்தியை மேம்படுத்துவது என்பது இயலாத காரியம்.