அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:
2017ல் தர்மயுத்தம் நடத்தியது தவறு என்பதை பன்னீர்செல்வம் உணர்ந்துள்ளார். தற்போது, 'ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்று கூறி வருகிறார். அதுதான் என் கருத்தும். அ.தி.மு.க., கோட்டையாக இருந்த ஈரோடை, எம்.ஜி.ஆரின் சின்னம் இருந்தும், தி.மு.க.,வுக்கு நிகராக பொருள் செலவு செய்தும், இ.பி.எஸ்., கோட்டை விட்டுள்ளார். அவர் கையில் அந்த சின்னம் இருக்கும் வரை, அ.தி.மு.க., செல்வாக்கை இழந்து கொண்டே வரும்.

'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற சித்தாந்தத்தில், பன்னீரும், இவரும் கைகோர்க்கலாம்... ஆனா, இவர் சொல்ற உண்மை தொண்டர்கள் எல்லாம், பழனிசாமி பக்கம் தானே இருக்காங்க!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் என்.ரங்கராஜன் பேட்டி:
தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு, 40 ஆயிரத்து, 299 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இது, கடந்தாண்டை விட, 3,400 கோடி ரூபாய் அதிகம். ஆனால், கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் ஆசிரியர்களின் நலன் சார்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. இது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனில், அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே, காட்டுகிறது. அரசுக்கு எதிரானபோராட்டத்தை, ஆசிரியர்கள் தீவிரப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.
கருணாநிதியின் மகனாகவே இருந்தாலும், அரசு ஊழியர்களை கையாளும் விஷயத்தில், ஜெ., பாணியை தான் ஸ்டாலின் கடைப்பிடிக்கிறாரு... இவங்க பூச்சாண்டிக்கெல்லாம், அவர் அசர மாட்டார்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி:
குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை கொடுப்பதாக சொல்லி விட்டு, 2 கோடி குடும்பங்களுக்கு மேல் உள்ள தமிழகத்தில், 50 லட்சம் குடும்ப தலைவியருக்கு மட்டும், மாதம், 1,000 ரூபாய் ஒதுக்கீடு செய்வது, மக்கள் ஏமாளிகள் என்ற எண்ணத்தில் தானே!

இதெல்லாம் உங்களுக்கு வேணும்னா, 'ஷாக்'கா இருக்கலாம்... நகை கடன் தள்ளுபடி அறிவிப்புல, 'ஆப்பு' வச்சப்பவே, அடுத்தடுத்த அறிவிப்பும் இப்படித் தான் இருக்கும்னு மக்களுக்கு நல்லாவே தெரியும்!
இந்திய கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் பேட்டி:
மின் தேவையை அதிகரித்து, தனியார் துணையுடன் திட்டங்கள்செயல்படுத்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மழைக் காலங்களில் காவிரியாற்றில் மிகையாக செல்லும் நீரை, தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம் குறித்து அறிவிப்பு இல்லை. இதை மானிய கோரிக்கையின் போது, கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வழக்கமா, தி.மு.க., அரசுக்கு பாராட்டு பத்திரம் தானே வாசிப்பாரு... இப்ப புதுசா ஏமாற்றம், கீமாற்றம்னு சொல்றாரே... 'முரசொலி' பத்திரிகையில, கட்டம் கட்டி திட்டப் போறாங்க!