பெங்களூரு, : ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக, நடிகர் சேத்தன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
'கர்நாடகாவில், திப்பு சுல்தானை கொன்றது மாண்டியாவை சேர்ந்த உரிகவுடா, நஞ்சே கவுடா' என பா.ஜ.,வினர் கூறினர். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகளும், 'ஆதாரம் இருந்தால் காட்டலாம்' என தெரிவித்தார்.
இந்நிலையில், கன்னட நடிகர் சேத்தன், 'டுவிட்டர்' பதிவில், 'ஹிந்துத்துவா என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. ராமர், ராவணனை தோற்கடித்து அயோத்திக்கு திரும்பிய போது, இந்திய தேசம் தொடங்கியது என சாவர்க்கர் கூறியது பொய்.
'பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என கூறுவதும்; உரிகவுடா, நஞ்சேகவுடா திப்புவை கொன்றது என கூறுவதும் பொய். ஹந்துத்துவாவை உண்மையால் தோற்கடிக்க முடியும்; உண்மை என்பது சமத்துவம்' என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகுமார் என்பவர் சேஷாத்திரிபுரம் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து நடிகர் சேத்தனை, நேற்று அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர்.
பின், 32வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், சேத்தனை ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.