ஹெண்ணுார் : காதலனுடன் ஓடிய மனைவியை கண்டுபிடித்து, கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சேக் சுகைல், 34. இவரது மனைவி தபசாம்பி, 32. பெங்களூரில் 2013ல் தங்கி, வேலை செய்தனர். அப்போது, நதீம் என்பவருடன் தபசாம்பிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சுகைல், மனைவியை கோல்கட்டாவுக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன், 2017ல் வீட்டை விட்டு வெளியேறிய தபசாம்பி, பெங்களூரு வந்து நதீமை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஹெண்ணுார் சாராயபாளையாவில் வசித்தனர். 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையில், மனைவி தபசாம்பி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்த சேக் சுகைல், நேற்று முன்தினம் இரவு அவர் வசித்த, வீட்டிற்கு சென்றார். கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு தகராறு செய்தார். அப்போது, தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து தபசாம்பியின் கழுத்தை அறுத்தார்.
இதில், அவர் ரத்தவெள்ளத்தில் இறந்தார். குழந்தையையும் கத்தியால் குத்தி விட்டு தப்பினார். அப்பகுதியினர், குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். கோல்கட்டாவுக்கு தப்ப முயன்ற சேக் சுகைலை ஹெண்ணுார் போலீசார் கைது செய்தனர்.