சூரிய கட்சிக்கும் ஆசை!
பொன்வயலில் பிற கட்சிக்கு ஆதரவு அளிப்பதே வழக்கமாக இருந்த கட்சிகளில் சூரிய கட்சியும் ஒன்று. தமிழகத்தில் இக்கட்சி ஆரம்பித்த போது கோல்டு சிட்டியிலும் ஆரம்பிச்சாங்க. ஆனாலும், ஒரு முறை கூட இக்கட்சியில் ஒருவரும் அசெம்பிளிக்கு தேர்வாகவில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக இங்குள்ள அசெம்பிளி தேர்தலில் போட்டியிடவே இல்லை. தமிழகத்தில் தற்போது இவர்களின் ஆட்சி இருப்பதால் இம்முறை போட்டியிடலாமென கூடி, பேசி, முடிவெடுத்தாங்களாம்.
இவர்களின் விருப்பத்தை மாநில தலைமைக்கு தெரிவித்து, அவர்களின் பரிந்துரையுடன் தலைமையிடம் அனுமதி கேட்க போறாங்களாம். அசெம்பிளி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் சூரியன் சின்னமும் இருக்க வேணும்னு ஆசைபட்டிருக்காங்க.
சர்வ கட்சிகளின் நிழலை விரும்பிய சூரிய கட்சிக்காரர்களை ஒன்று சேர்க்கவும், தமக்கு எவ்வளவு தான் ஓட்டு இருக்குது என்பதை சோதனை நடத்தவும் இதுவே பெரிய வாய்ப்பு என முடிவெடுத்து இருக்காங்க.
கட்சிகளுக்கு பஞ்சமில்லை!
பூ கட்சியில் யார் தான் வேட்பாளர் என்ற சிக்கலுக்கு விடை தெரியல. செங்கொடியின் இரு கட்சிகளுமே தங்களின் வேட்பாளர்களை அறிவிச்சாச்சு. இந்த பட்டியலில் இலை கட்சியினரும் சும்மா இருக்க போவதில்லை.
நீலக் கொடியின் பி.ஆர்.பி., - ஏ.ஆர்.பி.ஐ., பகுஜன் சமாஜ் மற்றும் ஏ.பி., மாநிலத்தின் தெ.தேசம். ஒய்.எஸ்.ஆர்., கட்சிகளும் போட்டியிட யோசிக்கிறாங்களாம்.
சட்டப் பிதா பேரனின் பி.ஆர்.பி., ஏற்கனவே 1994ல் அசெம்பிளிக்கு தேர்வானது. அவர்கள் தரப்பிலும், நாம் ஏன் போட்டியிட கூடாதென யோசிக்கிறாங்க.
கட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத கோல்டு சிட்டியில் எல்லா கட்சிகளுமே இம்முறை போட்டியிடுவதாக பேசிக்கிறாங்க. கட்சிகள் தரப்பில் இதுவரை எட்டு பேர் போட்டியிடுவதாக அடையாளம் காட்டிட்டாங்க.
அசெம்பிளி தேர்தலில் டபுள், டிரிபிள் டிஜிட் ஓட்டுகளை மட்டுமே வாங்கும் பல சுயேச்சைகளும் வழக்கமா போட்டியிடுறாங்க. இத்தேர்தலிலும் சில புதிய சுயேச்சை முகங்களும் இருக்க போகுது. அட்லீஸ்ட் நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்குவாங்களோ?
தேர்தலில் ஓட்டும், டொனேஷனும் கேட்கிற கட்சிகளும், பிற கட்சியின் வெற்றியை சிதைக்க 'பி' டீம் வேட்பாளர்களும், அடிக்கிற மாதிரி அடிக்க, அழுகிற மாதிரி அழுவது போல போட்டியில் நானும் இருக்கிறேன்னு காட்டுறாங்க. கட்சிகளிடம் பணம் பறிக்க உள்நோக்கத்துடன் சிலரும் போட்டி பட்டியலில் வர போறாங்க.
டோக்கன் தரப்போறாங்க!
தங்கமான நகரின் தொகுதியில் தேர்தலின் விதிமுறைகளை கடுமையாக்கிட்டாங்க. பரிசு பொருட்கள் கொண்டு வர, சப்ளை செய்ய நெருக்கடி கொடுத்தாச்சு. உகாதி பண்டிகைக்கு கைகாரர்கள் வழங்க இருந்த உணவுப் பொருட்களை தடுத்துட்டாங்களாம்.
காங்கிரஸ் பூத் கமிட்டி காரர்கள், வீடு தோறும் சென்று, அரிசி, பருப்பு, சர்க்கரை, வெல்லம் கொடுக்க வந்ததை பறிச்சிட்டாங்கன்னு சொல்லி, பூக்காரர்களுக்கு எதிர்ப்பா பிரசாரம் செய்து வராங்க.
உணவுப் பொருட்களுக்குரிய தொகையை கரன்சி நோட்டாக கொடுப்பதற்கு டோக்கன் தரப் போறாங்களாம். இதை எப்போ தரப்போறாங்கன்னு கிராமத்தினர் காத்திருக்காங்க.
***
ஓட்டுக்கு பூட்டு!
அசெம்பிளி தேர்தல் அறிவிப்பு வெளியானதும் முனிசி., செயல்பாடுகளும் முடக்கமாகிடுமாம். ஏற்கனவே திட்டமிட்ட பல வேலைகளை விரைந்து முடிக்க ஆபீசர்கள் ஒத்துழைக்க வேண்டுமே. ரா.பேட்டை பி.எம்.சாலையில் கம்பம் இருக்கு; மின் விளக்குகள் இல்லை. எப்போ தான் எரிய போகுதோ.
லோக் ஆயுக்தாவால் 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட கவுதம் நகர் பட்டா புத்தகம், முனிசி.,க்கு மீண்டும் வந்திருக்குது. தேர்தல் நேரத்தில் கவுதம் நகர் பட்டா பதிவு விவகாரத்தை முன் வைத்து நகராட்சியை கலைத்து விடுவதாக ஒரு கட்சி எச்சரிக்கை விடுத்திருக்குது. 3,000 ஓட்டுகள் உள்ள கவுதம் நகரில், மிரட்டல் கட்சிக்கு ஓட்டுக்கு பூட்டு மாட்ட போறாங்களாமே.