சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ம் ஆண்டு வரை நீடிக்கிறது. இந்த பதவியை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஒருங்கிணைப்பாளரை நீக்க அ.தி.மு.க.,வில் எந்த விதியும் இல்லை எனவும் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏ.,க்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தையும் எதிர்த்துள்ளதால், அந்த வழக்கை, இன்றைக்கு(மார்ச்22) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறியிருந்தார்.
தன்னிச்சையானது
இதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பன்னீர்செல்வம் தரப்பிலான மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் வாதிட்டதாவது: ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்த நிலையில், மீண்டும் அந்த பதவியை கொண்டு வந்துள்ளனர்.
பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரவும் ஜூலை11 பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எந்த வாய்ப்பும் அளிக்காமலும், காரணமும் கூறாமலும் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கை தன்னிச்சையானது, நியாயமற்றது.
அங்கீகாரம்
முதல்வர், நிதி அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ள பன்னீர்செல்வம், 1977 முதல் கட்சியில் உள்ளார். ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் முக்கியப்பணி ஆற்றி உள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது. இந்த பதவிகளை உருவாக்கிய தீர்மானத்திற்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த பதவிகள் 2026 வரை நீடிக்கிறது.

பெரும்பான்மை பலம்
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விதிகள் மாற்றப்பட்டு, தகுதி, நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. பழனிசாமி தரப்புக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், எந்த முடிவும் எடுக்க முடியும் எனக்கூறி முடிவெடுத்துள்ளனர்.
கட்சி அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும். இது தொடர்பாக எம்ஜிஆர் வகுத்து தந்த விதிகளை பொதுக்குழு உறுப்பினர்கள் மாற்ற முடியாது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள்.
நிராகரிப்பு
ஜூலை 23 பொதுக்குழு கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் அழைப்பு விடுத்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் இரட்டை தலைமையை மாற்றி ஒற்றை தலைமை கொண்டு வர வலியுறுத்தினர்.
சிலர் ஒற்றை தலைமையை வலியுறுத்தியதால், பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்குகள் தொடரப்பட்டன. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே ஒப்புதல் பெற்ற தீர்மானங்கள் தவிர, வேறு முடிவும் எடுக்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இரட்டை தலைமையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்டன.
நிலுவையில்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதி நீக்கம் செய்துவிட்டு, பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரும் தீர்மானம் ஜூன் 23 பொதுக்குழுவில் முன்வைக்கப்படவில்லை. தேர்தல் தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்படாத நிலையில், பதவிகள் காலாவதி என எப்படிக்கூற முடியும். பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள், கட்சி அடிப்படை விதிகள் திருத்தம் பற்றிய கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
விரோதம்
ஜூலை 11 பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தங்களை நீக்கும் சிறப்பு தீர்மானத்தின் மீது ஜூலை 11 பொதுக்குழுவில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளரை நீக்கியது முழுமையான தன்னிச்சையானது.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது. ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய அதிமுகவில் எந்த விதியும் இல்லை. சாதாரண உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுத்த முறை, கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் கொள்கைக்கு விரோதமானது.
திட்டமிட்டு நீக்கம்
உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறஅரசியல்கட்சிகள் சங்கங்களோ அல்லது கிளப்புகளோ அல்ல. தி.மு.க.,வுடன் நெருக்கமாக இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் செய்ததாக ஒரு காரணத்தை எளிதாக கூறி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்காக முக்கிய பதவி வகித்தவரை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இரட்டை தலைமையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்டன.
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால், அப்பதவிக்கு போட்டியிட தயார். கட்சி உறுப்பினர் பட்டியல் வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்ப பெறவும் தயார் . இவ்வாறு அவர் வாதிட்டார்.