சேலம்: சேலம் ஒன்றிய அலுவலகம் முன், தமிழக பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை செயலர் வடிவேலு தலைமை வகித்தார்.
அதில் மாவட்ட தலைவர் திருவேரங்கன் பேசுகையில், ''தமிழகத்தில் பழைய பென்ஷன் கேட்டு, 2003 முதல் பேராடுகிறோம். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால், பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதை போல, பழைய பென்ஷன் கிடைக்காது என, பட்ஜெட் மூலம் சுட்டிக்காட்டினர். முதல்வரை அழைத்து அரசு ஊழியர்கள் மாநாடு நடத்தியது பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. இனி நடத்தினாலும் பயன்தராது. கடும் போராட்டங்கள் மூலமே, கோரிக்கையை வென்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
அதேபோல் தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் என, மாவட்டத்தில், 25 இடங்களில் அரசு ஊழியர்கள், பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகரில், 5 இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. தவிர மணக்காடு, மோட்டார் வாகன பராமரிப்பு துறை அலுவலகம் முன், பட்ஜெட் கண்டன கூட்டம் நடந்தது.