டிஜிட்டல் சேவைகளால் உணவு, உடை, மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட எந்த தேவைக்கும் நாம் இன்று அலையத் தேவையில்லை. இருக்கின்ற இடத்திலிருந்தே, ஆர்டர் செய்து தேவையானப் பொருட்களை, தேவைப்படும் நேரத்தில் பெற்றுவிடுகிறோம். இந்த ஆன்லைன் சேவைத் தொழிலில் புதிதாக மற்றொரு சேவையும் இடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து ஓட்டல் உணவுகள் சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல். ஆனாலும் பலர் வேறு வழியின்றி ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடுகின்றனர். சுவையான, அதே சமயம் தரமான உணவு வேண்டும், அதற்கு மெனக்கெடவும் கூடாது என நினைப்பவர்களின் தேவையை உணர்ந்து ஒரு செயலி அறிமுகமாகியுள்ளது.
எப்படி அழகுக்கலைஞர்கள், வீட்டு வேலையாட்களின் சேவைகளை செயலி மூலம் பெறுகின்றோமோ, அதே ஐடியாவை இவர்கள் சமையலுக்கும் கொண்டு வந்திருக்கின்றனர். இந்த செயலியில் நீங்கள் உணவு ஆர்டர் செய்ய முடியாது. ஆனால் சுவையாக, விதவிதமாக சமைக்கத் தெரிந்த செஃப்களை ஹையர் செய்யலாம்.
கணவன், மனைவி இருவரும் வேலை முடித்து அலுப்புடன் வீட்டிற்குள் நுழைகிறீர்கள். அப்போது வீட்டிலேயே ஓட்டல் சுவையில் ஒரு உணவை தயாரித்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என தோன்றும். ஆனால் உடல் ஒத்துழைக்காது.
கவலையே இல்லாமல் இந்த செயலியில் தேவையான சேவையினை பெறலாம். ஒரு வேளை சமைப்பதற்கு சமையலர், மாதம் முழுக்க சமைப்பதற்கு சமையலர், வீட்டு விசேஷங்களுக்கு செஃப் என பல சேவைகள் உள்ளன. தற்போது குருகிராம், நொய்டாவில் மட்டும் இச்சேவை உள்ளது. விரைவில் அனைத்து நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளனர்.
ஒரு வேளை சமைக்க ரூ.300 முதல் கட்டணம். விஷேசங்களுக்கு செஃப்களை அழைக்க ரூ.1,000 முதல் கட்டணம் வசூலிக்கின்றனர். செப்களின் அனுபவம், அவர்களின் சிறப்பம்சங்கள் ஆகியவை புகைப்படத்துடன் பட்டியலிடப்பட்டிருக்கும். அவர்களின் முந்தைய வேலைக்கு ஸ்டார்ரேட்டிங்கும் இருக்கும். அதை வைத்து சிறந்த நபரை தேர்வு செய்யலாம்.
இந்த செயலி பற்றிய வீடியோ தற்போது 'எப்புட்றா' பாணியில் வைரலாகி வருகிறது. சுவையான அதே சமயம் நம் கண் எதிரில், நம் சமையலறையில் உணவு தயாராகி கிடைப்பதால் ஆரோக்கியத்தை நினைத்து கவலைப்படத் தேவையில்லை.