எல்ஐசி., நிறுவனம் நவம்பர் 2022 - பிப்ரவரி 2023 காலக்கட்டத்தில் அதன் சந்தைப் பங்கில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., மேலே குறிப்பிட்ட நான்கு மாத காலகட்டத்தில் அதன் சந்தைப் பங்கில் 400 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 4 சதவீதத்தை இழந்துள்ளது. காப்பீடு துறையில் எல்ஐசி.,யின் சந்தைப் பங்கு நவம்பர் 2022 இறுதியில் 67.73 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அது 63.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த 4 சதவீத இழப்பில் கிட்டத்தட்ட 1 சதவீத இழப்பு பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏற்பட்டது. ஆனாலும் எல்.ஐ.சி.,யின் சந்தை பங்கிற்கு நெருக்கமாக கூட எந்த தனியார் நிறுவனங்களும் இல்லை.
![]()
|
ஆண்டின் முதல் பாதியில் எல்ஐசி.,யிடம் தனியார் காப்பீடு நிறுவனங்கள் சந்தைப் பங்கை இழந்திருந்தன. தற்போது நிதியாண்டின் இறுதியில் அவை கம் பேக் தந்துள்ளன. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் மாதந்தோறும் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சந்தைப் பங்கைப் பெற்றன. ஒட்டுமொத்தமாக தனியார் ஆயுள் காப்பீட்டுத் துறை கடந்த மூன்று மாதங்களில் 4 சதவிகித சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன.
எச்.டி.எப்.சி., நிறுவனம் அதில் முன்னணியில் உள்ளது. அதனை ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பின் தொடர்ந்து முன்னேறுகின்றன. மற்றொரு பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எஸ்பிஐ., லைப் இன்சூரன்ஸ் நவம்பர் 2022 முதல் இதுவரை 0.9% சந்தைப் பங்கைப் பெற்றது. அதைத் தொடர்ந்து எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் 0.7% சந்தைப் பங்கைப் பெற்றது.
எல்ஐசி.,யின் பங்குகள் அதானி விவகாரம் மற்றும் புதிய வரி விதிப்பு முறையில் காப்பீடுகளுக்கு விலக்கில்லை என்ற பட்ஜெட் அறிவிப்பு போன்றவற்றால் ஏற்கனவே சரிவில் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 19 சதவீதம் பங்கு விலை குறைந்துள்ளது. இன்று (மார்ச் 22 ) பங்கு ஒன்றின் விலை ரூ.573-க்கு விற்பனையாகிறது.