வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ‛நீட் தேர்வு ரத்து மசோதாவை திருப்பி அனுப்பியதையே மக்களிடம் சொல்லாமல் மறைத்த கேவலமான ஆட்சி அதிமுக ஆட்சி' என விமர்சித்துள்ள அமைச்சர் உதயநிதி, ‛மத்திய அரசை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தினால் அதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வாரா' என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வோம் என அக்கட்சியினர் தொடர்ந்து வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி சமீபத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‛கல்வி உரிமை பறிக்கப்படும்போது தைரியமாக அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துகிறோம். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இதுதான்' எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறுகையில், ‛நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. கேட்டால், அமைச்சர் உதயநிதி, சட்டப்போராட்டம் நடத்தி வருவதாக கூறுகிறார்.
ஏன் நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தவில்லையா? இது வேடிக்கையாக இல்லையா? இந்த ரகசியத்தை கூறிய உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்' என கூறியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி அளித்த பதில்: அவர் சில இடங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்து பேசுகிறார். அவரது ஆட்சியில் நீட் தேர்வு ரத்து மசோதாவை டில்லிக்கு அனுப்பி, அதனை 2 முறை திருப்பி அனுப்பியதையே மக்களிடம் சொல்லாத கேவலமான ஆட்சிதான் அதிமுக ஆட்சி. கவர்னர் மாளிகை முன்போ, மத்திய அரசுக்கு எதிராகவோ நாங்கள் போராட்டம் நடத்தினால் அதில் கலந்து கொள்ள அவருக்கு தைரியம் இருக்கிறதா என்பதை முதலில் சொல்லட்டும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.