சென்னை: ''தி.மு.க.,வை எதிர்கொள்ள அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை அவசியம் எனவும், இதனால் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது'', என பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அவமதிப்பு
அப்போது, பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடியதாவது: அ.தி.மு.க.,வை பொறுத்தவரை பொதுக்குழு தான் அதிகாரம் மிக்கது. பொதுக்குழு முடிவை ஏற்பவரே கட்சி உறுப்பினராக இருக்க முடியும் என்பது விதி. இது அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும். பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பொதுக்குழு முடிவை அவமதிக்கும் வகையில் உள்ளது.
சூறையாடல்
அவர் பெரிய தலைவர் என்றால், மக்களிடமும், தேர்தல் ஆணையத்திடமும் சென்று நிரூபிக்கட்டும். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அவர் தனிக்கட்சி நடத்தி வருகிறார். விதிகள் பற்றி அவருக்கு கவலையில்லை. ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லையென்றால், அ.தி.மு.க., செயல்படக்கூடாது என நினைக்கிறார். சொந்த சகோதரரையே கட்சியில் இருந்து நீக்கினார். அப்போது, அவரிடம் விளக்கம் கேட்கப்படவில்லை. நோட்டீஸ் வழங்கவில்லை. அ.தி.மு.க.,வினர் கோவிலாக கருதும் தலைமை அலுவலகத்தையே சூறையாடினார். பொதுக்குழு நடைபெற்ற ஜூலை 11ல் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. அலுவலகத்தை சூறையாடிவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும். சூறையாடலை, பெரிய தலைவர் என சொல்லும் பன்னீர்செல்வம் வேடிக்கை பார்த்தனர்.

அநீதியில்லை
பன்னீர்செல்வம் தரப்பினரின் எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்படவில்லை. தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை உலகே அறியும். முக்கிய எதிர்க்கட்சியாக 2024 லோக்சபா தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயாராகி வருகிறது.
ரத்து
இரட்டை தலைமையால் அரசியல் ரீதியிலான முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிக்கல் இல்லாமல் விரைவாக முடிவெடுக்க ஒற்றை தலைமை என முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. தி.மு.க.,வை எதிர்கொள்ள ஒற்றை தலைமை மிகவும் அவசியம். வலிமையான ஒற்றை தலைமை அவசியம் என பொதுக்குழுவில் முடிவெடுககப்பட்டது. ஒற்றை தலைமை வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டது.
தவறு
11ம் தேதி பொதுக்குழு கூட்ட 2190 பேர் ஆதரவு தெரிவித்தனர். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் சம்மதத்துடன் பொதுக்குழு கூடியது. அதிமுக விதிகளின்படியே பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட்டது. அதனால், அந்த பதவியை மீண்டும் கொண்டு வந்தது விதிகளை மீறியது அல்ல. பொதுக்குழு நிகழ்வுகள் டிவியில் நேரலை செய்யப்பட்டன. தனக்கு தெரிவிக்காமல் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பன்னீர்செல்வம் கூறுவது தவறு. எங்களை நீக்குவதாக அறிவித்த பன்னீர்செல்வம், புதிதாக நிர்வாகிகளை நியமித்துள்ளார். உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். தொண்டர்கள் கோரிக்கைப்படி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. அதனை தடுக்க இயலாது. அதற்கு தடை விதிக்கக்கூடாது. அ.தி.மு.க.,வை வீழ்த்தும் நோக்கில் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இவ்வாறு பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
பாதிப்பு இல்லை
அ.தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடியதாவது: ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கே உள்ளது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த பதவியால் கட்சி அடிப்படை கட்டமைப்பு சிதைந்துவிடாது.
தேர்வு செய்ய கால அவகாசம் வேண்டும் என்பதால், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார். 52 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவி இருந்து வந்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பொதுச்செயலாளர் பதவிக்கான பாதை தெளிவாகி உள்ளது. கட்சியில் ஆதரவு இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே, தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
கட்சி முடிவு செய்த நிபந்தனையை சட்ட விரோதம் எனக்கூற முடியாது. கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றப்படுகிறது. பெங்களூரு புகழேந்தி நீக்கும் முன்னர் எந்த நோட்டீசும் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் வாதாடினார்.