படகுச்சவாரி செய்வது பலருக்கும் இனிமையான அனுபவமாகும். தண்ணீரில் படகு மிதக்கையில் பலருக்கும் காற்றில் மிதக்கும் உணர்வு கூட ஏற்படக்கூடும். ஆனால், மேகாலயாவில் உள்ள டவ்க்கி ஆற்றில் தண்ணீரில் படகு செல்லும்போது காற்றில் படகு மிதப்பது போன்ற மாயையை காணலாம்.
ரப்பர் மரத்தின் வேர்களால் ஆன பாலம், விசித்திரமான குகைகள், ஆர்ப்பாட்டமாக கொட்டும் நீர்வீழ்ச்சி என இயற்கை அழகை வாரி வழங்கும் இடங்களில் ஒன்று இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேகாலயா மாநிலம். இயற்கை அழகு கொட்டிக் குவிந்துள்ள இந்த மேகாலயாவுக்கு சென்றால் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக டவ்க்கி நதி உள்ளது. இந்தியா - வங்காளதேசத்துக்கு இடையே உள்ள எல்லையில் அமைந்துள்ள, ஆசியாவின் தூய்மை நகரமான மாவ்லின்னாங் வழியாக இந்த டவ்க்கி ஆறு (உம்ங்கோட் நதி) பாய்ந்தோடுகிறது. ஷில்லாங்கிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் இந்த ஆறு உள்ளது.
![]()
|
உலகின் தூய்மையான நதிகளில் ஒன்றான இந்த ஆற்றின் தண்ணீர் மிகவும் தெளிவாக கண்ணாடி போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தண்ணீரில் படகுகள் செல்லும் போது, காற்றில் படகு மிதப்பது போன்ற மாயையை உண்டாக்குகிறது. தண்ணீருக்கு அடியில் உள்ள பாறைகள், மீன்கள் உட்பட அனைத்தையும் வெறும் கண்களால் எளிதாகப் பார்க்க முடிகிறது. வெயில் காலங்களில் தண்ணீரின் அடிப்பகுதி அதிகளவில் தெரியக்கூடும்.
![]()
|
அழகிய காட்சிகள் மட்டுமின்றி பறவைகளின் இனிமையான சத்தத்தையும் எப்போதும் இங்கு கேட்கலாம். ஆற்றுத்தண்ணீரில் விழும் சூரிய கதிர்கள் மனதுக்கு தானாகவே அமைதியை வாரி வழங்குகிறது. இங்கு படகுச்சவாரி மட்டுமின்றி ஸ்நோர்கெலிங், கயாக்கிங் போன்ற பல தண்ணீர் சாகச விளையாட்டுக்களையும் விளையாடி மகிழலாம். பரபரப்பான நகர்பகுதியின் சலசலப்பில் இருந்து தப்பித்து அழகுடன், அமைதியையும் கண்கொள்ளாமல் ரசிக்க வேண்டிய இடமாகும். குளிர்ந்த தெளிவான தண்ணீரும், டவ்க்கி ஆற்றின் மீதுள்ள அழகிய தொங்குபாலமும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது.
![]()
|
நவ., முதல் ஏப்., வரை டவ்க்கி ஆற்றுக்கு செல்ல ஏற்ற காலமாகும். மழை சீசனில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதால் போக்குவரத்துக்கு சிரமம் உண்டாகக்கூடும். மவ்லின்னாங் கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.