கோவை:மானாவாரி நிலத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து சாதித்துக் காட்டிய, கோவையை சேர்ந்த விவசாயிக்கு பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி, தமிழக அரசு தலைமைச் செயலர் இறையன்பு கவுரவித்தார்.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் வட்டாரம், வெள்ளானைப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி செல்வராஜ், தன் நிலத்தில் கடந்தாண்டு வரை, மானாவாரி பயிர்களான சோளம், கம்பு, ராகி, பச்சை பயிறு பயிரிட்டு வந்தார்.
ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி, நெல் பயிரிட முடிவு செய்து, நிலத்தை தயார் செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பரிடம், துாயமல்லி விதை நெல், 15 கிலோ வாங்கி, நெல் நாற்றாங்கால் தயார் செய்து, விதை நேர்த்தி செய்தார். வேம்பு, நொச்சி, ஓணான்கொடி, எருக்கலை போன்ற இலைதழைகளை அடி உரமாக்கி, வயலை உழுது தயார்படுத்தினார்.
பின், அடிக்கு அடி இடைவெளி விட்டு கை நடவு செய்தார். ரசாயன உரமோ, பூச்சிக் கொல்லி மருந்தோ பயன்படுத்தவில்லை.
உயிர் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உரங்களை பாசன நீர் வழியாக நெல் வயலில் பயன்படுத்தினார்.
தற்போது, 110 நாட்களாகி விட்டன. நெற்பயிர் நல்ல முறையில் வளர்ந்து, அறுவடைக்கு தயாராகியுள்ளது.
இந்த பாரம்பரிய நெல் சாகுபடி முறையில், விதை நெல் வாங்கியது, வயல் தயார் செய்தது, நடவுக்கூலி மட்டுமே செலவு; வேறெந்த செலவும் இல்லை. இச்செய்தி, 12ம் தேதி நம் நாளிதழில் பிரசுரமானது.
அதைப் படித்த, தமிழக அரசு தலைமைச் செயலர் இறையன்பு, விவசாயி செல்வராஜை தொடர்பு கொண்டு பாராட்டினார்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேற்று முன் தினம், செல்வராஜை சென்னைக்கு வரவழைத்து, பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி கவுரவித்தார். வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உடனிருந்தார்.