செஞ்சி:செஞ்சி அருகே திரிந்த கரடியை, மயங்கிய நிலையில் வனத்துறையினர் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட முட்டுக்காடு வனப்பகுதியில் 15 நாட்களாக ஒரு கரடி திரிந்தது.
அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து கால்நடைகளைத் தாக்கியது. கடந்த 19ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு, பெருங்காப்பூர் மதுரா கோட்டிகல் பாறை என்ற கிராமத்தில் மாட்டுக் கொட்டகை அருகே கரடி இருப்பதாக செஞ்சி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதய துடிப்பு
வனச்சரகர் வெங்கடேசன், வனவர் சதீஷ், வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், சுரேந்திரன், ராஜாராமன் ஆகியோர் அங்கு சென்றனர்.
கரடி மயங்கி நிலையில் கிடந்தது. செஞ்சி கால்நடை மருத்துவர் செந்தில்குமார் பரிசோதனை செய்ததில் கரடியின் இதய துடிப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. கரடி செஞ்சி வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
முடிவு
விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், கால்நடை மருத்துவப் பல்கலை பேராசிரியர் டாக்டர் ஸ்ரீகுமார் மற்றும் வண்டலுார் கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் செஞ்சிக்கு வந்தனர்.
இதய துடிப்பை கண்காணிக்கும் கருவி பொருத்தி கரடிக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். தொடர் சிகிச்சைக்காக வண்டலுார் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
செஞ்சி காப்புக் காட்டில் கரடிகள் இல்லை. பிடிபட்டுள்ள கரடியின் கழுத்தில் பட்டை இருந்தது. இதனால், கரடியை வைத்து வித்தை காட்டியவர்களோ, தாயத்து விற்பவர்களோ பராமரிக்க முடியாமல் செஞ்சி காட்டில் விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
மாட்டுக் கொட்டகை அருகே மயங்கிக் கிடந்த கரடி மாடுகளுடன் சண்டையிட்டுள்ளது. அங்கிருந்த 2 மாடுகளுக்கும், கரடிக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.வளர்ப்புக் கரடி என்பதால் அதற்கு பழகிய உணவு காட்டில் கிடைக்காததால் பசியாலும் மயங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.