கோவை:தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் வெறும் வார்த்தை ஜாலங்கள் நிரம்பியதாக உள்ளது என, பா.ஜ., கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளாண் பட்ஜெட்டில் புதுமை எதுவும் இல்லை. சிறுதானிய இயக்கத்துக்கு 82 கோடி ரூபாய், ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இவற்றை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
கொள்முதல் விலை
விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளுக்கு பட்ஜெட்டில் எந்த தீர்வும் இல்லை. விவசாயிகளின் வருமானம் அதிகரித்தால்தான் அவர்களின் பிரச்னைகள் முடிவுக்கு வரும். அதற்கு விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக, கட்டடங்களாக மாறி வருகின்றன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதற்கு முடிவுகட்டாவிட்டால், உணவுப் பொருட்களுக்கு மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஒரு டன் கரும்புக்கு ரூ. 5,000, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,000 வழங்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், பெயரளவுக்கு மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் வார்த்தை ஜாலங்களால், வெற்று அறிவிப்புகளால் விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தோடு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வாங்கப் போனவருக்கு, கறிவேப்பிலை, கொத்து மல்லி மட்டுமே கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது தி.மு.க., அரசின் வேளாண் பட்ஜெட்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பயனற்ற காகித பட்ஜெட் நாகராஜ், மாநில தலைவர், பா.ஜ., விவசாய அணி: கடந்த வேளாண் பட்ஜெட் நிதி, முறையாக விவசாயிகளுக்கு சென்றடைந்ததா, என ஆய்வு மேற்கொள்ளாமல், 38 ஆயிரத்து 500 கோடிக்கு நிதி ஒதுக்கி, பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் காகித பட்ஜெட். 300 விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி என்ற அறிவிப்பு மத்திய அரசிடமுள்ள திட்டம். தேனி மாவட்டத்தில் 130 கோடி ரூபாயில் வாழை வளர்ப்புத் திட்டம், ஏற்கனவே மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
பசுமைக் குடில் திட்டத்துக்கு 22 கோடி ரூபாய் என்பது யானைப்பசிக்கு சோளப்பொறி. 600 ஏக்கருக்கு மேல் பசுமைக்குடில் அமைக்க விவசாயிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த நிதி, 10 ஏக்கருக்குக் கூட போதாது.
வேளாண் துறையில் பல வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கும்போது, ஒன்றியத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமனம் என்பது தேவையற்றது. முறைகேடுக்கு வழிவகுக்கும்.
வேளாண் பொறியியல் துறையில், டிரைவர் இன்றி வாடகை இயந்திரங்கள் முடங்கிக்கிடக்கின்றன. இதற்கு, 350 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது; பராமரிப்பும் இல்லை. இத்திட்டம் நடைமுறைக்கு உதவாதது. மொத்தத்தில் விவசாயிகளுக்கு பயனற்ற காகித பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.