குன்னுார்:குன்னுார் அரசு மருத்துவமனையில், மூன்று வயது குழந்தைக்கு, உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு, கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த கார்த்தி, காளியம்மாள் தம்பதியின், மூன்று வயது மகள் சரண்யாவை, அவரது பாட்டி அழைத்து வந்து உள்ளார்.
நேற்று முன் தினம் மதியம், வெந்நீர் தொட்டியில் சரண்யா தவறி விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
மாலை 3:30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர் இல்லாத நிலையில் நர்ஸ் மட்டுமே இருந்துள்ளார். மாலை 5:00 மணிக்கு குழந்தை இறந்ததாக தெரிவித்தனர்.
குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவ மனையை முற்றுகையிட்டனர்.
கூடுதல் எஸ்.பி., மோகன் நிவாஸ், தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் பேச்சு நடத்தி மக்களை சமாதானப்படுத்தினர். மருந்துமனையில் விசாரணை நடந்து வருகிறது.