மார்ச் 23, 1893
கோயம்புத்துார் மாவட்டம் கலங்கல் கிராமத்தில், கோவிந்தசாமி நாயுடு என்ற விவசாயிக்கு மகனாக, 1893ல், இதேநாளில் பிறந்தவர் துரைசாமி நாயுடு என்ற, ஜி.டி.நாயுடு. பள்ளிப் படிப்பில் ஆர்வமில்லாததால், அதை பாதியிலேயே கைவிட்டார். பின், ஹோட்டலில் வேலை செய்தார். அதில் சேர்த்த பணத்தில், ஒரு பைக் வாங்கி, அதை தனித்தனியாகப் பிரித்து, மீண்டும் இணைத்தார்.
பின், பலருடன் இணைந்து, பொள்ளாச்சி -- பழநி இடையே, பஸ் போக்குவரத்தை துவக்கினார். இவரே விதவிதமான வாகனங்களை உருவாக்கினார்.
பின், பருத்தி தொழிற்சாலைகளுக்கும், வேளாண்மைக்கும் உதவும் வகையில், புதிய கருவிகளை கண்டுபிடித்தார். பல நாடுகளுக்குப் பயணித்து, பொறியியல் அறிவை வளர்த்துக் கொண்ட இவர், இயந்திர ரேசர், எலக்ட்ரிக் மோட்டார், கேமரா அட்ஜஸ்டர், ஜூசர், கலப்பின பயிர்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தார்.
இவற்றுக்கு காப்புரிமை வழங்காத பிரிட்டிஷ் அரசு, அதற்கு மாறாக பலமடங்கு வரி விதித்ததால், தொழில் துறையிலிருந்து விலகி கல்விப்பணியில் ஈடுபட்டார். இவர், 1974 ஜனவரி 4ல், தன், 80வது வயதில் மறைந்தார்.
உலக அறிஞர்கள் வியந்த, 'இந்தியாவின் எடிசன்' ஜி.டி.நாயுடு பிறந்த தினம் இன்று!