சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே மதுராந்தகம் முதல் வெண்ணாங்குப்பட்டு வரையிலான 32 கி.மீ., தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
பள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதி முதல், வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வரை, 2.9 கி.மீ., சாலை குறுகலாக உள்ளதால், நெடுஞ் சாலைத் துறை சார்பாக சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதற்காக, 'டெண்டர்' விடப்பட்டு, சாலை விரிவாக்கப் பணி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் துவங்கியது.
ஏற்கனவே உள்ள சாலையின் மொத்த அகலம் 7 மீட்டர். தற்போது இரண்டு புறங்களிலும் தலா 1.5 மீட்டர் விரிவாக்கம் செய்து, மொத்தம் 10 மீட்டர் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், இடைப்பட்ட துாரத்தில், குறுகலாக இருந்த பழைய 4 சிறு பாலங்கள் அகற்றப்பட்டு, விரிவுபடுத்தப்பட்ட புதிய பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.