சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை 1-2 என இழந்தது.
![]()
|
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது.
'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் கிரீன், எல்லிஸ் நீக்கப்பட்டு வார்னர், ஆஷ்டன் ஏகார் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
பாண்ட்யா அசத்தல்
ஆஸ்திரேலிய அணிக்கு ஹெட், மிட்சல் மார்ஷ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. சிராஜ் ஓவரில் மார்ஷ் இரண்டு பவுண்டரி விளாசினார். ஷமி பந்தை ஹெட் சிக்சருக்கு பறக்கவிட்டார். பாண்ட்யா பந்துவீச்சில் ஹெட் (33), கேப்டன் ஸ்மித் (0) சிக்கினர். மிட்சல் மார்ஷ் 47 ரன்களில் அவுட்டானார்.
குல்தீப் 'சுழலில்' வார்னர் (23), லபுசேன் (28) ஆட்டமிழந்தனர். கேரி 38 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா 49 ஓவரில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப், பாண்ட்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
![]()
|
கோஹ்லி ஆறுதல்
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், சுப்மன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாட் பந்துவீச்சில் ரோகித் (30) சிக்கினார். ஜாம்பா 'சுழலில்' சுப்மன் (37) சிக்கினார். ராகுல் 32 ரன் எடுத்தார்.
அக்சர் (2) ரன் அவுட்டானார். ஆஷ்டன் ஏகார் 'சுழலில்' கோஹ்லி (54), சூர்யகுமார் (0) அவுட்டாகினர். பாண்ட்யா (40), ஜடேஜா (18) அணியை கைவிட்டனர். மற்றவர்களும் விரைவில் திரும்ப, இந்திய அணி 49.1 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜாம்பா 4 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது.