பார்லிமென்ட் இரு சபைகளிலும், ஆளுங்கட்சி தரப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வராமல் அமளி தொடர்கதையாகி வருவதால், சபை அலுவல்கள் முற்றிலுமாக முடங்கி உள்ளன. இதனால், மத்திய அரசுக்கு நாள் ஒன்றுக்கு, 3 கோடி ரூபாய் வரை வீணாகிறது. எனவே, மத்திய நிதிநிலை அறிக்கையை விவாதம் இன்றி இரு சபைகளிலும் நிறைவேற்றி விட்டு பார்லி., கூட்டத்தொடரை ஏப்., 6க்கு பதிலாக, வரும் 29ம் தேதியே முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 13ல் துவங்கியது. ஆரம்பித்த நாளில் இருந்து நேற்று வரை, ஒரு நாள் கூட சபை அலுவல்கள் முழுமையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே தினந்தோறும் அமளி வெடிப்பதால், இரு சபைகளுமே ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஆளுங்கட்சியான பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள், இம்முறை இரு சபைகளிலும் கடுமையான கோஷங்களை எழுப்புவதால், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரும் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பேச்சு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், 'சபையில் ராகுல் பேசுவதற்கு அனுமதி தரப்படும்; ஆனால், அவர் மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும், பிரச்னையை முடித்துக் கொள்ளலாம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'அதை ஒருபோதும் ஏற்க முடியாது' என, காங்., தரப்பு மறுத்துவிட்டது.
'ராகுல் பேசுவார்; ஆனால், மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. பார்லி.,யின் தற்போதைய முடக்கத்திற்கு நாங்கள் காரணம் அல்ல. அரசு தரப்பே துாண்டிவிட்டு, அமளியை ஏற்படுத்துவது தான் அனைத்துக்கும் காரணம்' என, காங்., தரப்பில் கூறப்பட்டது.
சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டிய கூட்டத்திற்கு காங்., மூத்த எம்.பி., ஆதிர் ரஞ்சன் சென்று இந்த கருத்தை தெரிவித்தார். ஆனால், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கூட்டிய கூட்டத்திற்கு, காங்., தரப்பில் ஒருவர் கூட செல்லவில்லை. இரு முறை அழைத்தும் கூட, காங்.,போகவில்லை.
ஆக, இரு சபைகளையும் வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. தற்போதுள்ள சூழ்நிலையில், மத்திய நிதி மசோதா மற்றும் துணைநிலை மானியக் கோரிக்கைகளை இரு சபைகளிலும் நிறைவேற்றுவது, அரசின் முக்கிய அலுவலாக உள்ளது.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதிநிலை அறிக்கைக்கு, சபையில் விவாதம் ஏதுமின்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.இதைப்போலவே, மத்திய நிதிநிலை மசோதாவை லோக்சபாவில் விவாதம் ஏதுமின்றி இன்றைய தினம் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இங்கு நிறைவேற்றப்பட்டு மூன்று நாட்கள் கழித்து வரும் 28, 29 தேதிகளில் ராஜ்யசபாவிலும் விவாதம் இன்றி நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பண்டிகைக்காக சென்றுள்ள பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும் இன்று கண்டிப்பாக பார்லி.,க்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டத் தொடர் துவங்கிய முதல் வாரத்தில், முதல் ஐந்து நாட்களில், வெறும் 97 நிமிடங்கள் மட்டுமே சபைகள் இயங்கியுள்ளன. நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை செலவாகிறது.
மேலும், 'வரும் 30ம் தேதி ராமநவமி பண்டிகைக்கு தங்கள் தொகுதிக்கு சென்று விமரிசையாக கொண்டாட வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.இவை அனைத்தையும் கருத்தில் வைத்து, ஏப்., 6 வரை நடக்க வேண்டிய கூட்டத் தொடரை, வரும் 29ம் தேதியுடன் முடித்துக் கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் -