வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவையை மையமாக கொண்ட தெய்வீகப்பேரவை ஒன்று, முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், 18 குறிப்புகளுடன் சென்னை, உயர் நீதிமன்ற, மதுரை கிளை உத்தரவு படி, தமிழ் வழியில் திருக்குட நன்னீராட்டு செய்ய உரிய வழிகாட்டுதல், உத்தரவுகள் வழங்க கோரியுள்ளது.
ஆனால், இந்த கோரிக்கை களுக்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த,'லெட்டர் பேட்' அனுப்பிய தெய்வீகப் பேரவை புதிதாக தோன்றியது.
கடந்த, 1970ம் ஆண்டிற்கு முன் தெய்வீகப் பேரவை என்ற அமைப்பு தருமையாதீனம், திருவாவடுதுறை ஆதீனம், அன்றைய குன்றக்குடி ஆதீனம் உள்ளிட்ட ஒன்பது மடங்கள் ஒன்று சேர்ந்து துவங்கியது.

தெய்வீகப் பேரவை
அதன் முக்கிய நோக்கங்கள் ஹிந்து மத பிரசாரம், சைவ, வைணவ பக்தி நுால்களை படித்து அனைவரும் பயன்பெறும் வகையில் சகாய விலையில் வெளியிடுவது தான்.
இதற்காக ஒரு பெரிய கட்டடத்தை சென்னை, ஆழ்வார்பேட்டை மஹாராஜா சூர்யா சாலையில் பேரவையின் பெயரில் வாங்கப்பட்டது. சில ஆண்டுகளில் பேரவை சரியாக இயங்காமல் ஆதீனகர்த்தர்கள் இடையே மன வேற்றுமையும் ஏற்பட்டு முடங்கியது.
இதையடுத்து, தெய்வீக பேரவை கட்டடத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றி, அதைப் பராமரிக்க மயிலை கபாலீஸ்வரர் கோவில் வசம் ஒப்படைத்தது.

1970-ம் ஆண்டிற்கு முன் இருந்த உண்மையான தெய்வீக பேரவை.
இந்நிலையில், 2020ம் ஆண்டு டிச., 14ம் தேதி அரசாணை வாயிலாக தெய் வீகப் பேரவை கட்டடம், கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தம் என்றது.
நீதிமன்றத்திலும் இவ்வாறே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து எடுத்து, கோவில்களை தணிக்கை செய்யும் துறை வசம் ஒப்படைக்கப் பட்டது.
ஒன்பது மடங்களின் கோடிக்கணக்கான ருபாய் மதிப்பிலான சொத்து அறநிலையத்துறை வசம் சென்றுவிட்டது.
கடந்த, 1970ம் ஆண்டிற்கு பின் பல அமைப்புகள் தெய்வீகப் பேரவை என்ற பெயர் கொண்டு, பதிவு செய்தும், செய்யாமலும் தமிழகத்தில் உலா வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன் தெய்வீகப் பேரவை என்ற புதிய அமைப்பு தங்கள், 'லெட்டர் பேட்'வாயிலாக முதல்வருக்கு அனுப்பிய, தேதி குறிப்பிடாத கடிதம் ஒன்று இணையதளங்களில் வலம் வந்தது.
இந்த புதிய அமைப்பு உண்மையான தெய்வீகப் பேரவை இல்லை. காரணம் இந்த அமைப்பில் மிகப் பெரிய, பழமையான தருமை, திருவாவடுதுறை ஆதீனங்கள் இல்லை.
மேலும், இந்தக் கடிதத்தில் உள்ளவற்றை படித்த போது, பிழைகளும், பொய்யுரைகளும் உள்ளன. எனவே, தமிழறிவும், உண்மையான சைவ நெறிப் பயிற்சியும் உடைய ஆதீனங்கள் இதை எழுதி இருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
அந்த கடிதம், ஹிந்து மத விரோதிகள், தமிழறிவில்லாமல் சரித்திர உண்மைகளைத் திருத்தி எழுதியதோ என நினைக்கத் தோன்றும்.
முதலில், சமஸ்கிருதம் மீதும், வேத நெறியில் ஒரு கூரான சைவ சமயத்தின் உண்மை பழக்க வழக்கங்கள் மீதும் வெறுப்பை உமிழும் இந்த புதிய அமைப்பு ஏன், 'தெய்வீகம்'என்ற சம்ஸ்கிருத வார்த்தையைகொண்ட பேரை வைத்துக் கொண்டது?
இந்த, 'லெட்டர்பேட்'ல் 18 விஷயங்கள் கூறப்பட்டு உள்ளன. இவற்றை தவறானவை, பெரும் தவறானவை, பொய்யுரை என்று மூன்றாக பிரிக்கலாம்.
பெரும்பாலான தமிழக கோவில்கள் பண்டைய மன்னர்களால் கட்டப்பெற்றன என்ற கூறப்பட்டுள்ளது. ஆனால், 44,000 கோவில்களில், 10,000 மட்டுமே, 200ஆண்டுகளுக்கு பழமையானவை.
அவற்றில் ஆயிரம் கோவில்கள் கூட சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டவை அல்ல.
பண்டைய காலங்களில் கோவில்களில் குடமுழுக்கு, விழாக்கள், பெருவிழாக்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே நடைபெற்றன என்ற மிகப் பெரிய பொய், கூசாமல் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கான சான்றுகள் எவையும் தரப்படவில்லை. காரணம் அப்படி ஒரு சான்றுகள் என்றுமே இருந்ததில்லை. சங்க காலம் துவங்கி சோழ, பாண்டியர் பேரரசு காலமான, 13ம் நுாற்றாண்டு வரை நான்கு வேதங்களும், ஆகமங்களும், சமஸ்கிருதமும் மன்னர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன்ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இயற்றிய வேத நெறி யாகங்கள் குறித்து புறநானுாறு சொல்கிறது.
மேலும், 63 நாயன்மாரில் ஒருவரான நின்றசீர் நெடுமாறர் - அரிகேசரிபராங்குசப் பாண்டியன் என்று அறியப்படுகிறார். இவர் சிவபெருமானுக்கு பல கோவில்கள் எழுப்பியவர்.
அந்தணர் மறை
அவர் இயற்றிய செப்புப் பட்டயத்தில் சோழ தேசம் காவிரியின் கரையில் உள்ள பெருமருதுார் என்ற ஊரைச் சேர்ந்த நாராயண பட்டசோமயாஜி என்ற அந்தணரை, ''இவர் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், 18 தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், வேதாந்தம், சித்தாந்தம் அறிந்தவர்,'' என்று பாராட்டி ஒரு பிரம்மதேயமாக நிலங்கள் கொடுக்கப் பெற்றதாக ஆவணம் செய்யப்பட்டு உள்ளது.
சிவபெருமான், 'சந்தோக சாம வேதம்' ஓதுபவர் என்று திருவீழிமிழலைத் தலத்து தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியமும் வேதத்தை “அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது.
ஆனால், தமிழில் வேள்விகள் இயற்றப்பட்டன, கோவில் பூஜைகள் நடத்தப்பட்டன என்று கூறுவதற்கு சான்றே இல்லை என்பது தான் சரித்திரம் கூறும் உண்மை.
மன்னர் ஆட்சிக்காலத்திற்கு பின் வந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் சமஸ்கிருத வழிபாட்டை கொண்டு வந்தது என்று கூறியுள்ளனர்.
தமிழ் மன்னர் காலத்திற்கு பின் வந்த புதியசமூகத்தினர் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் தான். அவர்கள் எதற்காக சமஸ்கிருதத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்? அப்படி எதுவும் அவர்கள் செய்யவில்லை.
தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில்களில் சமஸ்கிருத வழிபாடுகள் நடந்த சான்றுகளே இல்லை, கருவூர்த்தேவர், நம்பியாண்டார் நம்பி போன்ற சான்றோர்கள் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தியதாக சான்றுகள் இல்லை என அந்த, 'லெட்டர்பேட்' கூறுகிறது.
முதலில் கருவூர் தேவரோ அல்லது நம்பியாண்டார் நம்பியோ அந்தக் கோவில்களுக்கு எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தினர் என்பதற்கான ஆதாரங்களே இல்லை.
மகுடாகமம் எனும் ஆகம நெறியிலும், 'மகா சாயிகா பதம்' என்றபத விந்நியாச அடிப்படையிலும், எழுப்பப்பட்டதே ராஜராஜேச்சரம் எனும் தஞ்சை பெரிய கோவில் என்பதை ராஜ ராஜ சோழன் கல்வெட்டில் ஆவணப்படுத்தியுள்ளார்.
இப்படி கல்வெட்டு ஆதாரத்தையே மாற்றி பொய்யுரைப்பதை, உண்மையான சைவ சமய ஆதீனங்கள் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த, 'லெட்டர் பேட்' கடிதம் அவர்களால் எழுதப்பட்டிருக்காது என்று தோன்றுகிறது.
மேலும், உலகறிந்த உன்னத தெய்வப் பாடல்களான நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை, 'நாலாயிர திவ்ய பிரபஞ்சம்' என்று குறிப்பிட்டு உள்ளதைப் பார்த்தால் சமய அறிவும், தமிழ் அறிவும் உள்ள ஆதீனங்கள் நிச்சயமாக இந்தக் கடிதத்தை எழுதவில்லை என்றே சொல்லிவிடலாம்.
சைவ சமய நுால்கள், 'சிவமே வேதம் - வேதமே சிவம்' என்று கூறுகின்றன.
இதை உணர்ந்தவர்கள் உண்மைச் சைவர்கள், இந்த புது அமைப்பின் கடிதத்தில், பல பிழைகள், பொய்யுரைகள் உள்ளன.
கைபர் போலன் கணவாய் சிந்து சமவெளியில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் சமஸ்கிருத வழிபாட்டை துவங்கினர் என்று கூறியுள்ளனர்.
இதைப் பார்த்தால், ஹிந்துக்களை பிரித்தாள விரும்பிய ஐரோப்பிய வந்தேறிகள் கூறிய ஆதாரமே இல்லாத பொய்களை வழிமொழிவது தான் இவர்கள் நோக்கமோ என தோன்றுகிறது.
முகலாய பேரரசிற்கு பின்னால் தான் இந்திய நாட்டிலேயே சமஸ்கிருதவழிபாடுகள் நுழைந்தன என்று இவர்கள் குறிப்பிட்டு உள்ளது உளறிலின் உச்சம்.
ஒரு விஷயத்தை இவர்களும், தமிழ் ஹிந்துக்களும், அரசும் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
கடந்த, 1972 ல் வந்தத் தீர்ப்பில் உச்ச நீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக சொன்ன விஷயம் -'அறநிலையத்துறை சட்டத் தில் மத சம்பந்தமான விஷயங்களில் அறநிலையத்துறை குறுக்கிட எந்த விதியும் இல்லை; தொன்று தொட்டு வரும் வழிபாட்டு பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது' என்பது தான்.

1970-ம் ஆண்டிற்கு முன் இருந்த உண்மையான தெய்வீக பேரவை.
அரசாணை
எந்த மதத்திலும் வெகு காலமாக செய்யப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளை, நீதிமன்றம் கூட மாற்ற முடியாது என்பதே நம் நாட்டின் ஒப்பற்ற அரசியல் நிர்ணயச் சட்டம்.
அவ்வாறு இருக்கையில் இவர்களின் இந்த, 'லெட்டர்பேட்' வாயிலாக தமிழில் குடமுழுக்கு முதலிய வழிபாடுகள் கோவில்களில் செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது, இவர்களுக்கு சட்டமும் தெரியவில்லை என்பதையே காண்பிக்கிறது.
அவர் இயற்றிய செப்புப் பட்டயத்தில் சோழ தேசம் காவிரியின்கரையில் உள்ள பெருமருதுார் என்ற ஊரைச் சேர்ந்த நாராயண பட்டசோமயாஜி என்ற அந்தணரை, ''இவர் நான்கு வேதங்கள், ஆறுஅங்கங்கள், 18 தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், வேதாந்தம், சித்தாந்தம் அறிந்தவர்,'' என்று பாராட்டி ஒரு பிரம்மதேயமாக நிலங்கள் கொடுக்கப் பெற்றதாக ஆவணம் செய்யப்பட்டு உள்ளது
ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர்