சென்னை :கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய, 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா, இன்று சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, அவசர சட்டம் இயற்ற, தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்., 26ல் ஒப்புதல் அளித்தது. அக்., 1ல், அவசர சட்டத்துக்கு
கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார்.
தமிழக சட்டசபையில், அக்., 19ல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ஒப்புதலுக்காக, அக்., 28ல் அனுப்பப்பட்டது; கவர்னர் ஒப்புதல் தரவில்லை.
![]()
|
சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு, கவர்னர் ரவி கடந்த நவ., 24ல், அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கு, சட்டத் துறை சார்பில், 24 மணி நேரத்தில் விளக்கம்
அளிக்கப்பட்டது.
கடந்த டிச., 1ல், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்துறை அமைச்சர் பணீந்திர ரெட்டி, சட்டத் துறை செயலர் கார்த்திகேயன் ஆகியோர் கவர்னர் ரவியை சந்தித்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு
ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினர்.சந்திப்பின்போது, சட்ட மசோதா தொடர்பாக கவர்னர் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார். அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும், கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள்
கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, இம்மாதம் முதல் வாரத்தில், சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை, மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப, தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.
அதன்படி, சட்டசபையில் இன்று, அந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.சட்டசபையில் இன்று காலை கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விரிவான விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.