விக்கிரவாண்டி : முண்டியம்பாக்கத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டக் கோரி இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆர்.டி.ஓ., பேச்சு வார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் ,விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம்- ஒரத்துார் ஜங்ஷனில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியாவது அதிகரித்தது.
இதை தடுக்க 'நகாய்' சார்பில் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர கோரி அனைத்து கட்சிகள் மற்றும் 5 கிராம பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப் பட்டது.
அதையொட்டி நேற்று முன்தினம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டம் தோல்வி அடைந்தது.
நேற்று இரவு 7.00 மணிக்கு விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில், நகாய் திட்ட இயக்குனர் வரதராஜன், டி.எஸ்.பி., பார்த்திபன், தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் நகாய் அலுவலக திட்ட இயக்குனர் சார்பில் பொதுமக்கள் கோரிய இடத்தில் மேம்பாலம் கட்டித்தர திட்ட அறிக்கை தயாரித்து, டில்லியிலுள்ள நகாய் தலைமை அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மூன்று மாதம் அவகாசத்திற்கு பிறகு அப்பகுதியில் மேம்பாலம் கட்டித்தரப்படும் என நகாய் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.