புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் அமைந்தது முதல், சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, துாய்மை இந்தியா இயக்கம் துவக்கப்பட்டது. பொது இடங்களில் அசுத்தம் செய்வது தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத் தவிர, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நேற்று உலக தண்ணீர் நாள் அனுசரிக்கப்பட்டது. ஐ.நா.,வின் 2023ம் ஆண்டுக்கான, உலக குடிநீர் மேம்பாட்டு அறிக்கையின்படி, உலகெங்கும், 26 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அதுபோல, 46 சதவீத மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை.
இந்நிலையில், ஜல்சக்தி அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள், நம் நாட்டில் குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் மேம்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுகின்றன. மார்ச் 21ம் தேதி நிலவரப்படி, ஜல்சக்தி அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள்:
* நாடு முழுதும், 11.49 கோடி வீடுகளுக்கு, குழாய் இணைப்பு வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது
* 1.53 லட்சம் கிராமங்களில், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைக்கிறது
![]()
|
* பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், முன்னேற்றத்துக்கு ஆர்வமுள்ள மாவட்டங்களில் குழாய் இணைப்பு வாயிலாக குடிநீர் வினியோகம் செய்ய, நடப்பு நிதியாண்டில், 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2018 - 2019 உடன் ஒப்பிடுகையில் இது, 12 மடங்கு அதிகம்
* இதன்படி, 9.34 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கு, மூன்று ஆண்டுகளில் குழாய் இணைப்பு வாயிலாக குடிநீர் வசதி கிடைத்துள்ளது. இது, 37 மடங்கு உயர்வாகும்
* நாடு முழுதும், 9.02 லட்சம் பள்ளிகளுக்கு குழாய் இணைப்பு வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இது, 18 மடங்கு உயர்வாகும். முன்னேற்றத்துக்கு ஆர்வமுள்ள மாவட்டங்களில் குடிநீர் வசதி, ஆறு மடங்கு அதிகரித்துள்ளது
* ஹரியானா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மாநிலங்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும், 80 மாவட்டங்களைச் சேர்ந்த 8,220 கிராம பஞ்சாயத்துகளில், நிலத்தடி நீரை சேமிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 6,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது
* கங்கை துாய்மை இயக்கத்தின் கீழ், 32 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில், 409 திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டன; 232 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
* 'ஸ்வச் பாரத்' எனப்படும் துாய்மை இந்தியா இயக்கம், 2014, அக்., 2ல் துவக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 11 கோடி வீடுகளுக்கு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. 2.23 லட்சம் சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன
* நாடு முழுதும் உள்ள அனைத்து கிராமங்கள், கிராம பஞ்சாயத்துகள், மாவட்டங்கள், பொது இடத்தில் அசுத்தம் செய்யப்படாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன
* தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 19 மாநிலங்களில், 80 நகரங்களில், 36 நதிகளில் மாசுபடுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.