வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லியின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட 'போஸ்டர்'களை போலீசார் அகற்றினர். இது தொடர்பாக, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நகரின் பல்வேறு இடங்களில், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் நேற்று ஒட்டப்பட்டிருந்தன. இவற்றில், 'மோடியை நீக்குங்கள்; நாட்டை காப்பாற்றுங்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
நகரில் இப்படி ஒட்டப்பட்டிருந்த, 2,000க்கும் மேற்பட்ட போஸ்டர்களை போலீசார் அகற்றி உள்ளனர். இந்நிலையில், போஸ்டர்கள் கட்டுகளுடன் சென்ற ஒரு வாகனத்தை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது, அவற்றை ஆம் ஆத்மி அலுவலகத்தில் கொடுப்பதற்காக செல்வதாக அந்த வாகன டிரைவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 36 வழக்குகள் பதிவு செய்து உள்ள போலீசார், அந்த போஸ்டர்களை அச்சடித்த அச்சக உரிமையாளர் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
![]()
|
வழக்கமாக போஸ்டர்களில், அதை வெளியிடுவது யார், எங்கு அச்சடிக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இந்தத் தகவல்கள் இல்லாததால், போஸ்டர்கள் அகற்றப்பட்டதாகவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மோடி அரசு சர்வாதிகாரத்தின் புதிய உச்சம்' என, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி, தன் சமூக வலைதள பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது.