உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
க.சரவணன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சி பீடத்தில்அமர்ந்தது முதல், ஒவ்வொரு துறையாக முறைகேடுகள் கோலோச்சி வருகின்றன என்றால் மிகையில்லை. அந்த வரிசையில், 'லேட்டஸ்டாக' அரங்கேறி இருப்பது, ஆவின் பால் பாக்கெட் எடை மோசடி.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனம் நிகழ்த்தி வரும் இந்த எடை மோசடி, பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும், வாய் பிளக்க வைத்திருக்கிறது. எப்படி எல்லாம் ரூம் போட்டு யோசித்து, தி.மு.க.,வினர் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர் என்றும் பேச வைத்து உள்ளது.
கடந்த சில நாட்களாக, ஆவின் நிறுவனம் விற்பனைக்கு அனுப்பும், பால் பாக்கெட்டுகள் ஒவ்வொன்றும், 10 கிராம் முதல், 40 கிராம் வரை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுகச் சிறுக திருடப்படும் பால், மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய், மேலிடம் வரை பங்கிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
![]()
|
ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு... வனவாசத்தின் போது, ஒரு மரத்தடியில் ராமனும், சீதையும் அமர்வர். அப்படி அமரும் போது, தன் கையில் உள்ளகோதண்டத்தை, ராமன் நிலத்தில் நிறுத்தி வைப்பார். அப்படி நிறுத்தும் போது, கோதண்டம் மண்ணில் இருந்த ஒரு தேரையின் முதுகில் குத்தியபடி நின்று விடும்...
தேரைக்கு வலி உயிர் போகும்; ஆனாலும், கண்ணீர் மல்க உபாதையை தாங்கியபடியே, ராமன் எப்போது கோதண்டத்தை எடுப்பார், தனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கும். ராமன் தன் கோதண்டத்தை, மண்ணிலிருந்து கையில் எடுக்கும் போது தான், அது ஒரு தேரையின் முதுகில் குத்தி நின்று கொண்டிருந்தது என்று தெரிய வரும்...
'ஏன் அமைதியாக வலியை பொறுத்துக் கொண்டிருந்தாய்; கொஞ்சம் கத்தி இருக்கலாமே?' என, தேரையைப் பார்த்து வினவுவார் ராமன்.
அதற்கு அந்த தேரை, 'ராமா... மற்றவர்கள் துன்புறுத்தினால், நான், 'ராமா...' என்று உன்னை அழைப்பேன். நீயே என்னை துன்புறுத்தும் போது, நான் என்ன செய்வேன்; யாரை அழைப்பேன்?' என்று பதிலளிக்கும்.
அதுபோல, அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆவினில், அலுவலர்கள் தவறு செய்தால், அரசிடம் முறையிடலாம். ஆவினில் சிறுகச் சிறுக திருடப்படும் பாலை விற்று கிடைக்கும் வருவாய், மேலிடம் வரை பங்கிடப்படுவதாக கேள்விப்படும் போது, நுகர்வோர் எங்கே சென்று, யாரிடம் முறையிடுவது?
கோவில் வாசலில் வரிசையாக பிச்சைக்காரர்கள் அமர்ந்து, பிச்சை கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்தப் பிச்சைக்காரர்களிடமே பிச்சை கேட்கும் பெரிய மனிதர்களும், தமிழக நிர்வாகத்தில் இருக்கின்றனர் என்று கேள்விப்படும் போது, கேவலமாக உள்ளது.