தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்: வெளிநாடுகள் சிலவற்றில், உயர் ரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, உற்பத்தி திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் உள்ளது. எனவே, 150 முன்னோடி விவசாயிகளை, இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: நம்ம ஊரில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தி, மற்ற நாட்டு விவசாயிகள், நம் தொழில்நுட்பத்தை தெரிஞ்சுக்க, இங்க வர்ற அளவுக்கு வேளாண் துறையில புரட்சி ஏற்படுத்தினீங்கன்னா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
***
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அறிக்கை: பட்ஜெட் உரையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மிகுந்த ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
![]()
|
டவுட் தனபாலு: உங்களுக் கான வாக்குறுதிகளை மட்டும் தான், இந்த அரசு நிறைவேற்றாமல் போக்கு காட்டுவது போல புலம்புறீங்களே... மாதந்தோறும் மின் கணக்கீடு, காஸ் சிலிண்ட ருக்கு, 100 ரூபாய் மானியம், டீசல் விலை குறைப்புன்னு இன்னும் நிறைய பாக்கியிருக்கே... அதை எல்லாம் செய்றப்ப, உங்க பக்கமும் வருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
***
தமிழக வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி: ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வேளாண் துறைக்கு, 1,000 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டு, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 23 ஆயிரம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 28 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு: என்னமோ, ஆட்சியாளர்கள் வீட்டு பீரோவுல இருந்து அள்ளி குடுத்த மாதிரி பேசுறாரே... 'குடி'மகன்கள், வருஷத்துக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு கொட்டிக் குடுக்கிறாங்களே... அதுல இருந்து தான், 10 சதவீதத்தை விவசாயத்துக்கு கூடுதலா ஒதுக்கி இருக்கீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!