சென்னை: 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, எரிசக்தி துறை ஆகியவற்றுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைந்தது ஏன்' என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சில துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இது தொடர்பாக, அரசு அளித்துள்ள விளக்கம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு, இந்த பட்ஜெட்டில் 3,512.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 4,281.76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், மத்திய அரசுடன் சேர்ந்து செயல்படுத்தும் உயர் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு, 1,107 கோடி ரூபாய், மத்திய அரசின் பங்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது மத்திய அரசு, இத்திட்டத்தின் வழிமுறைகளை மாற்றி, அதன் பங்கை மாநில அரசுக்கு வழங்காமல், நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தும் என அறிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில், மத்திய அரசின் பங்கை பெற்று, உயர் கல்வி உதவித் தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

எரிசக்தி துறை
இத்துறைக்கு, இந்த ஆண்டு பட்ஜெட்டில், 10 ஆயிரத்து, 693 கோடி 51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 19 ஆயிரத்து, 297 கோடி, 52 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்பு மானியமாக, 13 ஆயிரத்து 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பின், பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், மின் வாரியத்தின் இழப்பு குறைந்துள்ளது.
எனவே, இழப்பு மானியத்துக்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில், 1,523.23 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசின் திறமையான மேலாண்மையை எடுத்துக் காட்டுகிறது.
ஊரக வளர்ச்சித் துறை
இத்துறைக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில், 22 ஆயிரத்து, 561 கோடி, 71 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 26 ஆயிரத்து, 647 கோடி 19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்துக்காக, 3,000 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது, ஜல் ஜீவன் திட்டத்தை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்படுத்துகிறது. இதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில், இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு, நேரடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.