சென்னை : மறைந்த திரைப்பட பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு, 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என பெயர் மாற்றம் செய்து, நகராட்சி நிர்வாகத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
டி.எம்.எஸ்., என அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜன், 1922 மார்ச் 24ம் தேதி பிறந்தார். தன் 40 ஆண்டு கால இசைப் பயணத்தில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 'கலைமாமணி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். தன் 91வது வயதில், 2013ல் மறைந்தார்.
இந்நிலையில், அவரது நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த மேற்கு வட்டச் சாலையின் பெயரை, டி.எம்.சவுந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம் செய்ய, சென்னை மாநகராட்சி பரிந்துரை செய்தது.
அதையேற்று, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, சாலை பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளார். நாளை நடக்கும் நிகழ்ச்சியில், இப்பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டுகிறார்.