வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'எதுவும் செய்யாமல் நாடகம் போட்டு, தமிழகத்தின் தள்ளாட்டத்தை நிறுத்த முடியாது. இதற்கு மேல் தி.மு.க.,விடம் எதிர்பார்க்கவும் முடியாது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக நிதி அமைச்சர் திக்கி திணறி பட்ஜெட்டை வாசிக்கும்போது அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அவர்களின் ஆட்சியை போலவே செயலற்று, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இதுபோன்ற 'பட்ஜெட் மாடல்' இதுவரை எங்கும் நடந்ததில்லை.
திக்கி திணறியது நிதி அமைச்சர் மட்டுமல்ல; தமிழக அரசின் நிதி நிலைமையும் தள்ளாடி கொண்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையால் மட்டுமல்ல, அரசின் திறமை இன்மையால் வருமானத்தை பெருக்க வழிவகைகளை ஆராயாமல் ஆண்டுதோறும், 'டாஸ்மாக்' விற்பனை நிதியை அதிகரித்து கொண்டே உள்ளனர்.
அனைத்து குடும்ப தலைவியருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறந்து, தற்போது தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் என்று, அரசு அறிவித்துள்ளது. என்ன தகுதி தேவைப்படுகிறது என்பது புரியவில்லை. தங்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டும், இந்த பணத்தை வழங்குவதற்கான ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.
![]()
|
பட்ஜெட்டில் நம் கடன் நிலை என்ன; வருமானம் எப்படி எல்லாம் மாறியுள்ளது; செலவினம் எப்படி மாறியுள்ளது ஆகிய, மூன்றும் மிக முக்கியம். இதுகுறித்த விரிவான தகவல் பட்ஜெட்டில் இல்லை. இப்படி எதுவுமே செய்யாமல், நாடகம் போட்டு வாய் சொல் வீரம் காட்டுவதன் வாயிலாக, தமிழகத்தின் தள்ளாட்டத்தை நிறுத்த முடியாது. இதற்கு மேல் திறனற்ற தி.மு.க.,விடம் எதிர்பார்க்கவும் முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவரின் மற்றொரு அறிக்கையில், 'தி.மு.க., அரசு சிறு விமர்சனங்களால் திகைத்து நிற்கிறது. ஒரு 'ட்ரோல்' வீடியோவை வெளியிடுபவர் கைது செய்யப்பட வேண்டும் என்றால், ஒட்டுமொத்த தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினரும் சிறையில் இருக்க வேண்டும். ஏனெனில், அது அவர்களின் முழு நேர தொழில். கருத்து சுதந்திரத்தை குறைப்பது, நள்ளிரவு கைதுகள் பாசிஸ ஸ்டாலினின் உண்மையான குணாதியம். இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.