கீழக்கரை-காவிரி குடிநீருக்காக கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில்(இ.சி.ஆர்.,) தள்ளுவண்டிகளுடன் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி மருதன் தோப்பு, மாவிலாத்தோப்பு, ஆழ்வார்கூட்டம், பனையங்கால் உள்ளிட்ட கிராமங்களில் முறையாக காவிரி குடிநீர் வராததால் 2 கி.மீ.,ல் உள்ள கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் அகத்தியர் கோயில் அருகே பொது குழாயில் காவிரி நீரை சேகரிக்கின்றனர். மருதன் தோப்பு கிராம மக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் காவிரி நீர் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பெயரளவில் குறைவான நேரம் தான் காவிரி நீர் வருகிறது. இதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ.10க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம்.
வருமானத்தின் ஒரு பகுதியை தண்ணீருக்கு செலவிட வேண்டி இருப்பதால் ஐந்து குடம் சுமக்க கூடிய தள்ளு வண்டியில் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் இரவும் பகலும் தள்ளுவண்டி மூலம் தண்ணீர் சேகரிக்கின்றனர்.
இவர்கள் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி வருவதால் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. அச்சத்துடன் தண்ணீர் சேகரித்து வருகிறோம்.
எனவே தில்லையந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி நீரை முறையாக விநியோகம் செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.