சென்னை : ஊதிய உயர்வுக்கான அரசாணையை அமல்படுத்தக்கோரி, அரசு டாக்டர்கள் சங்கத்தினர், சென்னையில் இன்று(மார்ச் 23) உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில், செயலர் ரவிசங்கர் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், அரசு டாக்டர்களுக்கு ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கு பயன் தரும் வகையில் அரசாணை, 293ஐ அறிவித்தார். இந்த அரசாணை, ஒரு சிலரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டு உள்ளது.
அரசாணை 293ஐ அமல்படுத்தக் கோரி, சென்னை ராஜரத்தினம் மைதானம் வளாகத்தில், இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில், அரசு டாக்டர்கள் 500 பேர் பங்கேற்க உள்ளனர். அரசு அலட்சியம் காட்டினால், மார்ச், 29ல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு; ஏப்., 5ல் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.