வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : சென்னை - கோவையை அடுத்து சென்னை - மதுரை இடையே 'வந்தே பாரத்' ரயில் இயக்க ரயில்வே முன்வர வேண்டும். இதற்காக தென் மாவட்ட எம்.பி.,க்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும்.
சென்னை-- -மதுரை இடையே தற்போது தினம் பகல் நேர ரயில்களாக தேஜஸ், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ், இரவு பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்ட பின் மதுரை - சென்னை இடையே அதிகமான ரயில்கள் இயக்க வலியுறுத்தப்பட்டது. புதிய ரயில்கள் இயக்கப்படும் என்ற ரயில்வேயின் அறிவிப்பு அப்படியே உள்ளது.
சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை ஏப்.,8 ல் பிரதமர் மோடி துவக்குகிறார். சென்னை - மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்க தென் மாவட்ட எம்.பி.,க்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
![]()
|
எஸ்.ஆர்.எம்.யூ., கோட்ட செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் கூறியதாவது: கோவைக்கு முன் சென்னை - மதுரை இடையே தான் 'வந்தே பாரத்' ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மதுரைக் கோட்டத்தில் உள்ள சீனியர் லோகோ பைலட்டுகள், டெக்னீஷியன்கள் தயார் நிலையில் இருந்தனர்.
சென்னை - மைசூரூ, சென்னை - கோவை போல் சென்னை - மதுரை இடையேயும் அதிவேகத்தில் ரயில் இயக்கும் வகையில் தண்டவாளங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. சென்னை - மதுரை இடையே தற்போது இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை போதியதாக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டும் தான் எந்த ரயிலிலும் சீட் உறுதி செய்ய முடிகிறது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சென்னை - மதுரை இடையேயும் வந்தே பாரத் ரயில் இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தொழில் வளர்ச்சிக்கும் ரயில் போக்குவரத்து முக்கிய காரணம். குறிப்பாக கேரளாவில் ரயில்வே துறைக்கு தனி மாநில அமைச்சர் உள்ளார். எந்த கோரிக்கைகளையும் கட்சி பாகுபாடின்றி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றிணைந்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி திட்டங்களை பெறுகின்றனர். அதுபோல் தமிழகத்திலும் புதிய ரயில்கள் வசதிகளை எம்.பி.,க்கள் கேட்டு பெற வேண்டும் என்றனர்.