வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: ''திருப்பூர் பின்னலாடை உற்பத்தியை டிஜிட்டல்மயமாக மேம்படுத்த, தொழில்துறையினர் திட்டமிட வேண்டும்,'' என, 'பிராண்ட்ஸ் அண்ட் சோர்சிங் லீடர்ஸ் அசோசியேஷன்' தலைவர் சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில், ஐ.கே.எப்., அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், 49வது 'இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர்' கண்காட்சி நேற்று துவங்கியது. 'பிராண்ட்ஸ் அண்ட் சோர்சிங் அசோசியேஷன்' சேர்மன் சுவாமிநாதன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.
ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர், செயற்கை நுாலிழை ஆடை கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.

முன்னதாக, சுவாமிநாதன் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளில், திருப்பூர் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.
சீனாவுக்கு மாற்றாக, இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய பல்வேறு நாடுகளும் விரும்புகின்றன. அந்நாடுகளை ஈர்க்கும் வகையில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மறுசுழற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பிடம் பெற்று, நாட்டின் தலைசிறந்த தொழில் நகராக திருப்பூர் உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக, பின்னலாடை உற்பத்தியை டிஜிட்டல்மயமாக்க, தொழில்துறையினர் திட்டமிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
செயற்கை நுாலிழை ஆடை தயாரிப்பு
ஐ.கே.எப்., அசோசியேஷன் தலைவர் சக்திவேல் கூறுகையில்,''பின்னலாடை உற்பத்தியில் தனிமுத்திரை பதித்துள்ள திருப்பூர், 80 சதவீதம் பருத்தி; 20 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடை தயாரித்து வருகிறது.
சர்வதேச வர்த்தகம், 80 சதவீதம் செயற்கை நுாலிழை: 20 சதவீதம் பருத்தி என்ற அடிப்படையில் நடக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, திருப்பூரின், பருத்தி மற்றும் செயற்கை நுாலிழை ஆடைகள் ஏற்றுமதி, 50:50 என்று உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.