வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேசிய அரசியல் தலைவர் என்ற நிலைக்கு தன்னை முன்னிலைப்படுத்த, முதல்வர் ஸ்டாலின் வகுக்கும் வியூகம் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'பா.ஜ.,வை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். பிரதமர் யார் என்பது முக்கியமல்ல, யார் பிரதமராக வரக் கூடாது என்பது தான் முக்கியம்' என, தன் பிறந்த நாள் விழா கூட்டத்தில், தேசிய அரசியலை மையமாக வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அதற்கு உடனடி பதிலாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்' என்றார். மேலும் காங்கிரஸ், பா.ஜ., அல்லாத மாநில கட்சிகளுடன் சேர்ந்து, தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியிலும், மம்தா ஈடுபட்டுள்ளார்.
மம்தாவை போல், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போன்றவர்கள், காங்கிரஸ் தலைமையை ஏற்க முன்வரவில்லை என்றால், தன் தலைமையை ஏற்க வைக்கும் புதுத் திட்டத்தை, ஸ்டாலின் வகுத்துள்ளார்.
கருணாநிதி என்ற மையப் புள்ளியை வைத்து, தன்னை தேசிய அரசியல் தலைவர் என்ற அளவுக்கு உயர்த்துவதற்கு, ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார். கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடி, தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு எதிராக பலமான அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளார்.

தேசிய அளவில், மாநில கட்சிகளில் தி.மு.க., தான் பெரிய கட்சி என்பதை நிரூபிக்க, புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கவும், மாவட்ட செயலர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூரில் ஜூன் 3ல் நடக்கும் கருணாநிதி நுாற்றாண்டு விழா மாநாட்டில், காலை நிகழ்ச்சியில், தமிழக கூட்டணி தலைவர்கள் அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், கமல் போன்றவர்களை பங்கேற்க வைக்க, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். மாலையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், சரத்பவார், சந்திரபாபு நாயுடு, பரூக் அப்துல்லா, டி.ராஜா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி போன்ற தலைவர்களை அழைக்க உள்ளார்.
கருணாநிதியுடன் பழகிய தேசிய அரசியல் தலைவர்கள், மாநாட்டிற்கு வர மறுக்க மாட்டார்கள் என நம்பும் ஸ்டாலின், அம்மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களின் வாயிலாக, தேசிய அளவில் தி.மு.க., தலைமையை ஏற்க வைக்கலாம் என திட்டமிடுகிறார். அவரது வியூகம் வெற்றி பெறுமா என்பது, அழைப்பை ஏற்று யார் யார் வருகின்றனர் என்பதை பொறுத்தே அமையும்.