சென்னை: 'சென்னை மாநகராட்சியில் சட்டவிரோதமாக 'போஸ்டர்' ஒட்டிய 805 பேர் மீது புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை மாநகரை 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் வாயிலாக அழகுபடுத்தும் பணிகள் நடக்கின்றன. ஆனால், அரசு கட்டடங்கள், தனியார் மற்றும் சாலையோரங்களின் அழகை சீர்குலைக்கும் வகையிலான 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டு வருகின்றன. விளம்பர 'பேனர்'களும் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து, நம் நாளிதழ் அவ்வப்போது சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டு வருகிறது. இதைத்தொடரந்து, போஸ்டர் கலாசாரத்திற்கு மாநகராட்சி தடை விதித்தது. ஆனாலும், விதிமீறி பலர், தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி அளித்த புகாரின் அடிப்படையில், 805 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் - 2019ன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை, கட்டுமான கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகரில் பொது இடங்களில் பொதுமக்களின் முகம் சுளிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழகத்தின் சுலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான, கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மார்ச் 3 முதல் 16ம் தேதி வரை, பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு 10.78 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டடக் கழிவுகளை கொட்டிய நபர்களிடமிருந்து 8.80 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கட்டடங்கள், பொது இடங்களில் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டிய 805 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, 1.61 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் 'போஸ்டர்' ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து, மாநகரை துாய்மையாக பராமரிக்க, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். துாய்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள் மற்றும் காலிமனைகளில் அதிக குப்பை காணப்பட்டால், பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
-ககன்தீப் சிங் பேடி, கமிஷனர், சென்னை மாநகராட்சி
'ட்ரோன்கள்' பறக்க தடை
சென்னையில் நடக்கும் ஜி - 20 மாநாடை முன்னிட்டு, வரும் 25ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னையில், நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களுக்கு, 'ஜி - 20' மாநாடு நடக்க உள்ளது. இதில், 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவர்கள், சென்னையில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா, ரமடா பிளாசா, ஹப்ளீஸ், பாரக் ஹையாத் ஆகிய ஹோட்டல்களில் தங்க உள்ளனர்.
கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலில், மாநாடு மற்றும் கருத்தரங்கு நடக்க உள்ளது. இதனால், வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கியுள்ள ஹோட்டல்கள், இவர்கள் பயணம் செய்யும் வழித்தடம், 'ரெட் ஜோன்' எனும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி, வரும், 25ம் தேதி வரை, சிவப்பு மண்டல பகுதியில், ஆளில்லா குட்டி விமானம் எனும், ட்ரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.