மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு சரியான தொகை கிடைக்காமல், மிகவும் அல்லல்படுவது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில், மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. இன்று மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இது குறித்து எதுவும் பேசாமல், ஒரு சம்பிரதாயத்திற்காக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது. இதில், விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும் இடம் பெறவில்லை.
விவசாயத்துக்கு பெயர் பெற்ற டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவங்க தானே இவங்க... விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண, அரசுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது ஆலோசனை சொல்லலாமே!
இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழக தலைவர், சங்கர் வானவராயர் அறிக்கை:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. சென்னை, கோவை, ஓசூரில் தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, சர்வதேச தொழில்நுட்ப துறையில் தடம் பதிக்கும் வகையில் தமிழகத்தை உயர்த்தும். மூன்றாம் நிலை நகரங்களில், புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது.
ஜம்பமா அறிவிக்கிறது முக்கியமில்ல... தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுப்பதில் ஏகப்பட்ட பிரச்னைகள் எட்டிப் பார்க்குமே... அதை எப்படி அரசு சமாளிக்க போகுது?

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
நடப்பாண்டில், 'டாஸ்மாக்' வருமானம், 45 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த ஆண்டில், 36 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது, 25 சதவீதம் அதிகரித்துஉள்ளது. தமிழக 'குடி'மக்கள் கடந்த ஆண்டை விட, 25 சதவீதம் அதிகம் குடித்துஉள்ளனர் அல்லது, 25 சதவீதம் குடிகாரர்கள் அதிகரித்துள்ளனர். வாழ்வது, 'குடி' அரசு; வளர்வது, 'குடி'மக்கள்.
அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும், 'காமதேனு'வாக இருப்பது, 'குடி'மக்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!
மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலர் அருணாச்சலம் அறிக்கை:
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி உள்ளதுடன், எதிர்கால தலைமுறையை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன் அமைந்துள்ளது. பட்ஜெட்டுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவிக்கிறது. அதே நேரம், சேவை உரிமை சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்துகிறோம். இது, முதல்வரின் முகவரி திட்ட நோக்கத்தை நிறைவேற்ற பேருதவியாக இருக்கும்.
போகிற போக்கை பார்த்தா, நித்தமும் தி.மு.க.,வுக்கு துதி பாடும் அவங்க கூட்டணி கட்சிகளுக்கே இவங்க, 'டப் பைட்' தருவாங்க போலிருக்கே!